சம்பா, தாளடி பயிருக்கு காப்பீடு செய்யலாம்
சம்பா, தாளடி நெற்பயிருக்கு காப்பீடு செய்ய அடுத்த மாதம் 15-ந் தேதி கடைசி நாள் என கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.;
திருவாரூர், கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பயிர் காப்பீட்டு திட்டம்
விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் கடந்த 2016-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு நெல் பயிருக்கு காப்பீடு செய்ய இப்கோ டோக்கியோ நிறுவனமானது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் 15-ந்தேதி கடைசி நாள்
இந்த திட்டத்தில் சம்பா நெல் பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.529 பிரீமியம் தொகையாக செலுத்த வேண்டும். விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலர்கள் வழங்கும் இ-அடங்கல் அல்லது அடங்கல் படிவத்தைப் பெற்று விண்ணப்பபடிவம், முன்மொழிவுபடிவம், ஆதார் கார்டு நகல் மற்றும் வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் ஆகியவற்றை இணைத்து அந்தந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலோ அல்லது தேசிய வங்கிகளிலோ, பொது சேவை மையங்கள் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த பயிர் காப்பீட்டு திட்டத்தில் பயன் பெற விவசாயிகள் சம்பா நெல் பயிருக்கு பிரீமியம் செலுத்த அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந் தேதி கடைசி நாளாகும்.
தவறான பதிவுகள் நீக்கம்
விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்யும் போது ஒரே சர்வே எண்ணிற்கு ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பதிவு செய்தாலோ, சாகுபடி செய்யப்பட்ட பரப்பினை விட கூடுதலாக பதிவு செய்தாலோ, பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்ட வழிகாட்டுதல் அடிப்படையில் தவறான பதிவுகள் நீக்கம் செய்யப்படும்.
விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்யும் போது விவசாயின் பெயர், வங்கி கணக்கு எண், சாகுபடி செய்த கிராமத்தின் பெயர், பயிரின் பெயர் (நெல்-II), புலஎண், மற்றும் சாகுபடிசெய்த பரப்பு ஆகிய அனைத்து தகவல்களும் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
பொதுசேவை மையங்கள்
இத்திட்டத்தில் கடன் பெற்ற மற்றும் கடன் பெறாத விவசாயிகளும் பதிவு செய்யலாம். மேலும் பொது சேவை மையங்களில் பயிர் காப்பீடு பதிவு செய்ய வரும் விவசாயிகளின் அடங்கல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டதற்கான முத்திரையினை கண்டிப்பாக இடுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது என முத்திரை உள்ள அடங்கல்களை மீண்டும் பதிவேற்றம் செய்யக்கூடாது என்று பொது சேவை மையங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. எனவே விவசாயிகள் இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் முன்பு விரைவில் பயிர்களை காப்பீடு செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.