சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அகற்றப்படுமா?
சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அகற்றப்படுமா?
கூத்தாநல்லூர் அருகே குலமாணிக்கத்தில் சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்்றிவிட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
கூத்தாநல்லூர் அருகே உள்ள குலமாணிக்கத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. இந்த தொட்டியில் தினமும் தண்ணீர் நிரப்பப்பட்டு அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்து காணப்படுகிறது.
இடிந்து விழுமோ? என அச்சம்
குறிப்பாக கட்டிடத்தில் ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டு காணப்படுகிறது. கட்டிடத்தை தாங்கி நிற்கும் தூண்களில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து கான்கிரீட் கம்பிகள் வெளியில் தெரியும் அளவிற்கு காணப்படுகிறது. மேலும் சிமெண்டு காரைகள் நாளுக்கு நாள் பெயர்ந்து விழுந்து கட்டிடம் இடிந்து விழுமோ? என கிராம மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ள இடத்தையொட்டி அரசு பள்ளியும், கோவிலும் உள்ளது.
புதிதாக கட்டித்தர வேண்டும்
இதனால் பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் கூடும் இடம் என்பதால் எந்தநேரத்திலும் கட்டிடம் இடிந்து விழுந்து விபரீதம் ஏற்படுமோ? என்றும், பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் இதுவரை புதிய தொட்டி கட்டித்தர நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அந்தபகுதி மக்கள் கூறுகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றி விட்டு, அதே இடத்தில் புதிதாக தொட்டி கட்டித்தர வேண்டும் என்று கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.