சேதமடைந்த பாசன வாய்க்கால் மதகு சீரமைக்கப்படுமா?

சேதமடைந்த பாசன வாய்க்கால் மதகு சீரமைக்கப்படுமா?

Update: 2023-02-24 18:45 GMT

கூத்தாநல்லூர் அருகே சேதமடைந்த பாசன வாய்க்கால் மதகை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புனவாசல் பாசன வாய்க்கால்

கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலத்தில் புனவாசல் பாசன வாய்க்கால் உள்ளது. இந்த பாசன வாய்க்கால் மூலம் வெண்ணாற்றில் இருந்து வரும் தண்ணீரை முறையாக கொண்டு செல்வதற்காக 30 ஆண்டுகளுக்கு முன்பு மதகு மற்றும் தண்ணீரை திறப்பதற்கும், மூடுவதற்கும் ஏற்ற வகையில் ஷட்டரும் அமைக்கப்பட்டது.

இதனால் பாசன வாய்க்கால் மூலம் வயல்களுக்கு ஆற்றில் இருந்து வரும் தண்ணீரை போதுமான அளவில் கொண்டு சென்று ஒவ்வொரு ஆண்டிலும் நெல், உளுந்து, பயறு, பருத்தி போன்ற பயிர்கள் சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக பாசன வாய்க்கால் மதகு சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது.

சேதமடைந்த மதகை சீரமைக்க வேண்டும்

குறிப்பாக திருகு குழாய் மற்றும் ஷட்டர் சேதமடைந்து மதகின் உள்பகுதியில் தண்ணீர் சென்று வருவதில் சிரமம் உள்ளது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக போதுமான அளவில் தண்ணீரை முறைப்படி கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் சேதமடைந்த பாசன வாய்க்கால் மதகு இருக்கும் இடம் தெரியாத அளவிற்கு அந்த இடத்தில் அடர்ந்த காடுகள் சூழ்ந்து உள்ளன.

எனவே நடப்பு ஆண்டில் விவசாய பணிகளை தொடங்குவதற்கு முன்பாக சேதமடைந்த பாசன வாய்க்கால் மதகு மற்றும் ஷட்டரை சீரமைத்து தர வேண்டும் என்று அந்த பகுதி விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்