ஓசூரில் வெறிநோய் தடுப்பூசி முகாம்-கலெக்டர் தொடங்கி வைத்தார்

Update: 2022-09-28 18:45 GMT

ஓசூர்:

ஓசூரில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாமை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தொடங்கி வைத்தார்.

வெறிநோய் தடுப்பூசி முகாம்

ஓசூர் கால்நடை மருத்துவமனையில் உலக வெறிநோய் தினத்தையொட்டி, செல்ல பிராணிகள் வெறிநோயினால் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில், கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் பிராணிகள் வதை தடுப்பு சங்கம் ஆகியவை இணைந்து இவவச வெறிநோய் தடுப்பூசி முகாமினை நடத்தின.

இந்த முகாமை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தொடங்கி வைத்து பார்வையிட்டார். மேலும் பொதுமக்களுக்கு வெறிநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

முறையான சிகிச்சை

மனிதர்களுக்கு பெரும்பாலும் தெருநாய்களின் மூலமே வெறிநோய் வர வாய்ப்புள்ளது. வெறிநோயை தடுக்க அனைத்து நாய்களுக்கும் கண்டிப்பாக கால்நடை டாக்டர் மூலம் வெறிநோய் தடுப்பூசி செலுத்த வேண்டும். செல்ல பிராணிகளை தெருக்களில் சுதந்திரமாக சுற்ற விடக்கூடாது.

பிராணிகளால் கடிபட்ட காயத்தை முழுமையாகவும், வேகமாகவும் சோப்பு மற்றும் அதிகளவிலான தண்ணீரை கொண்டு சுமார் 10 நிமிடங்கள் கழுவ வேண்டும். போவிடோன் அயோடின் போன்ற கிருமிநாசினியை கொண்டு கடிபட்ட காயத்தை சுத்தம் செய்து, உடனடியாக அருகில் உள்ள டாக்டரை அணுக வேண்டும். தகுந்த மற்றும் முறையான சிகிச்சையை, கடித்த உடனே அளிப்பதன் மூலம் வெறிநோய் வராமல் தடுக்கலாம்.

10 நாட்கள்

நாய் யாரையாவது கடித்தால், அந்த நாயை கால்நடை டாக்டரிடம் கொண்டு சென்று ஆலோசனை பெற வேண்டும். மேலும் தனி அறையில் நாயை வைத்து 10 நாட்களுக்கு கவனிக்க வேண்டும். அதற்கு உடல் நலக்குறைவோ அல்லது நடவடிக்கையில் இயல்புக்கு மீறிய மாறுதல்களையோ கண்டறிந்தால் உடனடியாக கால்நடை மருத்துவமனைக்கு தெரிவிக்க வேண்டும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தை, வெறிநோய் இல்லாத மாவட்டமாக்க அனைவரும் ஒத்துழைப்ப தர வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இந்த முகாமில் மண்டல இணை இயக்குனர் ராஜேந்திரன், முதன்மை மருத்துவர் ரவிச்சந்திரன், கால்நடை பராமரிப்பு உதவி இயக்குனர் இளவரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்