வளர்ப்பு யானைகளின் உடல் எடை கணக்கீடு

முதுமலையில் வளர்ப்பு யானைகளின் உடல் எடையை வனத்துறையினர் கணக்கெடுத்தனர்.

Update: 2022-08-16 14:22 GMT

கூடலூர், 

முதுமலையில் வளர்ப்பு யானைகளின் உடல் எடையை வனத்துறையினர் கணக்கெடுத்தனர்.

வளர்ப்பு யானைகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. காட்டில் தாயை பிரிந்து தவித்தல், ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த யானைகளை வனத்துறையினர் பிடித்து வந்து முகாம்களில் பராமரித்து வருகின்றனர். இதற்காக முதுமலை தெப்பக்காடு முகாமில் கால்நடை மருத்துவர் மற்றும் பாகன்கள் குழு பணியாற்றி வருகின்றனர்.

இந்தநிலையில் 3 மாதங்களுக்கு ஒரு முறை வளர்ப்பு யானைகளின் உடல் எடையை வனத்துறையினர் கணக்கிட்டு வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் வளர்ப்பு யானைகளின் உடல் எடை கணக்கெடுக்கப்பட்டது. கோடை வறட்சி காரணமாக வளர்ப்பு யானைகளின் உடல் எடை சற்று குறைவாக இருந்தது.

இந்தநிலையில் கூடலூர் தொரப்பள்ளியில் வனத்துறைக்கு சொந்தமான எடை மையத்தில் நேற்று வளர்ப்பு யானைகள் உடல் எடை கணக்கெடுக்கப்பட்டது.

130 கிலோ அதிகரிப்பு

வசீம், மூர்த்தி, முதுமலை, சேரன், சீனிவாசன் உள்பட 21 யானைகள் முதுமலையில் இருந்து தொரப்பள்ளிக்கு அழைத்து வரப்பட்டன. பின்னர் வனச்சரகர் மனோகரன் தலைமையில் கால்நடை மருத்துவ ஆய்வாளர் ரமேஷ், வனவர் சந்தனராஜ் உள்ளிட்ட குழுவினர் யானைகளின் உடல் எடையை கணக்கெடுத்தனர். அப்போது பெரும்பாலான யானைகளின் உடல் எடை 130 கிலோ வரை அதிகரித்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும் சில யானைகளின் உடல் எடை சராசரியாக 60 கிலோ வரை குறைந்து இருந்தது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, தற்போது தொடர்ந்து நல்ல மழை பெய்து வனம் பசுமையாக உள்ளதால் பசுந்தீவன தட்டுப்பாடு இல்லை. இதனால் வளர்ப்பு யானைகளின் உடல் எடை 130 கிலோ வரை அதிகரித்து உள்ளது. சில யானைகள் ஊருக்குள் வரும் காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதால் அதன் எடை 60 கிலோ வரை குறைந்து உள்ளது. எடை குறைந்த யானைகளின் உடல் நலனை மேம்படுத்த தனி கவனம் செலுத்தப்படும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்