கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் முற்றுகை போராட்டம்
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முற்றுகை போராட்டம்
நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார்.
தமிழ்நாடு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தினர் மாவட்ட தலைவர் அங்கப்பன் என்ற ராஜ் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், "இலவசமாக செட்டாப் பாக்ஸ்களை பொதுமக்களுக்கு வழங்கி விட்டு தற்போது பொதுமக்களால் செயலிழக்கம் செய்யப்பட்ட பாக்ஸ்களுக்கு அவற்றின் கிரையத்தொகை என்று சொல்லி பெருந்தொகையை கேபிள் டி.வி. ஆபரேட்டர்களிடம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். கேபிள் டி.வி. ஆபரேட்டர்களின் நலவாரியத்தை செயல்படுத்த வேண்டும்" என்று கூறியுள்ளனர்.
அலங்கார விளக்குகள்
நெல்லை மாவட்ட பொதுஜன பொதுநல சங்கத்தின் தலைவர் முகமதுஅய்யூப் கொடுத்த மனுவில், "நெல்லை மாநகர பகுதியில் டீக்கடைகள், உணவகங்கள் மற்றும் ஏராளமான கடைகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான சாலையோர கடைகளும் அடங்கும். இந்த கடைக்காரர்கள் தங்களது கடைகளை அழகுபடுத்தி வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்தில் சிறிய அளவிலான அலங்கார மின்விளக்கு சரங்களை அமைத்துள்ளனர். இவற்றை முறையாக ஒயரிங் செய்து அமைக்காமல், தற்காலிகமாக தள்ளுவண்டிகளிலும், கடைகளுக்கு வெளியே மரங்கள், இரும்பு பைப்புகளிலும் சுற்றி அமைத்துள்ளனர். எனவே இதுபோன்ற மின்விளக்குகளை கடைகளுக்கு வெளியே அமைத்திட தடை செய்து பொதுமக்களின் உயிர்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இதுவரை பணம் வழங்கவில்லை. உடனே பணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் மனு கொடுத்தனர். நெல்லை பேட்டையை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் முத்துஅரளி என்ற மாற்றுத்திறனாளி பெண்ணை திருமணம் செய்துள்ளார். கணவன்- மனைவி இருவரும் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தங்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மனு கொடுத்தனர்.
சாலையை சீரமைக்க வேண்டும்
நெல்லை டவுனில் இருந்து பேட்டை வரை உள்ள சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும் என்று பேட்டை நகர ஆட்டோ ஓட்டுநர்கள் கூட்டமைப்பினர் மனு கொடுத்தனர்.
இந்து மக்கள் கட்சியினர் மாவட்ட தலைவர் மாரியப்பன் தலைமையில் கொடுத்த மனுவில், "அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற பா.ஜனதா, இந்து மக்கள் கட்சி, இந்து தொண்டர்கள் மீது செருப்பு, கற்கள் வீசி தாக்குதல் நடத்திய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுதலைச் சிறுத்தைகளின் கட்சி நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுதலைச்சிறுத்தைகள் கட்சியை தடை செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளனர்.
அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கக்கூடிய சிறப்பு ஊக்கத்தொகையை உடனே வழங்க வேண்டும் என்று மாணவர்கள் மனு கொடுத்தனர்.
இதேபோல் பல்வேறு அமைப்பினர் வந்து மனு கொடுத்தனர்.