கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்;

Update:2022-11-22 00:15 IST

விழுப்புரம்

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு மென்பொருள் சேவைகள் வழங்கி வந்த தனியார் நிறுவனத்தின் மென்பொருள் சேவைகள் கடந்த 19-ந் தேதி முதல் தடைபட்டதால் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் சேவைகள் பல பகுதிகளில் உள்ள செட்டாப் பாக்ஸ்களில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் சேனல் தெரியாததால் வாடிக்கையாளர்களும், அரசு கேபிள் டி.வி. ஆபரேட்டர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தொழில்நுட்ப கோளாறுகளை சரிசெய்யும் பணியில் அரசு கேபிள் டி.வி. நிறுவனம் செயல்பட்டு வந்தாலும் கடந்த 3 நாட்கள் ஆகியும் சரிசெய்யப்படவில்லை. இதனால் பாதிப்பிற்குள்ளான விழுப்புரம் நகர கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நெட்வொர்க் பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்புகொண்டால் சரியான பதில் தர மறுப்பதாகவும், டி.டி.எச். தொழில்நுட்பத்திற்கு வழிவகுக்கும் செயல்போல் உள்ளதாக கூறி தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். அதன் பிறகு ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொண்டு அவர்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அம்மனுவில், இப்பிரச்சினையில் அரசு உடனடியாக தலையிட்டு தொழில்நுட்ப கோளாறை சரிசெய்து எங்களுடைய வாழ்வாதாரத்தை காக்கும்படி கேட்டுக்கொள்கிறோம் என அம்மனுவில் கூறியிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்