புடலங்காய் அறுவடை
திருக்கடையூர் பகுதியில் புடலங்காய் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.;
திருக்கடையூர் பகுதியில் புடலங்காய் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அறுவடை பணி தீவிரம்
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர், சிங்கனோடை உள்ளிட்ட பகுதிகளில் கோடை மழை போதிய அளவு பெய்தது. இதன் மூலமாக விவசாயிகள் மணல் திடல்களில் பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து வருகிறார்கள். இந்த நிலையில் சிங்கனோடை பகுதியில் நிலத்தடி நீரை பயன்படுத்தியும், பம்பு செட்டு மூலமாக குளங்களிலிருந்து தண்ணீரை இறைத்தும் சுமார் 10 ஏக்கரில் புடலங்காய் சாகுபடி செய்து உள்ளனர். தற்போது சாகுபடி செய்யப்பட்ட புடலங்காய் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. இதையடுத்து விவசாயிகள் அறுவடை பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து சிங்கனோடைைய சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் கூறுகையில், தற்போது புடலங்காய் பயிரிட்டு வருகிறோம். இதற்கு பந்தல் அமைத்து அதன் மேல் செடிகளை வளர விடுவோம். இந்த பயிர் 45 நாட்களுக்கு பிறகு அறுவடைக்கு தயாராகி விடும். இதனை உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து வரும் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். புடலங்காய் நார்சத்து கொண்டது. இதற்கு சந்தையிலும் வரவேற்பு அதிகம்.
ஒரு கிலோ ரூ.20-க்கு விற்பனை
இந்த ஆண்டு புடலங்காய் அதிக அளவில் விளைச்சல் கண்டுள்ளது. ஒரு காய் ரூ.12-க்கும், ஒரு கிலோ ரூ.20-க்கும் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். இதனை ஒரு கிலோ ரூ.40-க்கு கடையில் விற்கின்றனர். இந்த ஆண்டு கூடுதலான விலைக்கு வியாபாரிகள் கொள்முதல் செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம் என்றார்.