வீதி வீதியாக சென்று வாக்கு கேட்கும் அரசியல் கட்சியினர் ஈரோட்டில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்

ஈரோட்டில் வீதி வீதியாக சுற்றி வாக்கு சேகரிக்கும் அரசியல் கட்சியினரால் கிழக்கு தொகுதியில் தேர்தல் களம் சூடு பிடித்து உள்ளது.

Update: 2023-02-02 20:51 GMT


ஈரோட்டில் வீதி வீதியாக சுற்றி வாக்கு சேகரிக்கும் அரசியல் கட்சியினரால் கிழக்கு தொகுதியில் தேர்தல் களம் சூடு பிடித்து உள்ளது.

இடைத்தேர்தல்

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெராவின் திடீர் மறைவால், இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த ஜனவரி 31-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில் 20-க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்து உள்ளனர். நேற்று முன்தினம் தே.மு.தி.க. வேட்பாளர் ஆனந்த் வேட்புமனுதாக்கல் செய்தார். நேற்று நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா வேட்புமனு தாக்கல் செய்தார்.

இன்று (வெள்ளிக்கிழமை) தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. (எடப்பாடி பழனிசாமி அணி) வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் கட்சி வேட்பாளர் சிவப்பிரசாத் ஆகியோர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்கு சேகரிப்பு

தேர்தல் அறிவிக்கப்பட்ட ஓரிரு நாட்களிலேயே தி.மு.க. கூட்டணியில் எந்த கட்சி போட்டியிடுவது?, யார் வேட்பாளர் என்ற முடிவுகள் செய்யப்பட்டு விட்டதால், அதிரடியாக களத்தில் இறங்கி வாக்கு சேகரிக்கும் பணியில் தி.மு.க. ஈடுபட்டது. தி.மு.க.வின் முக்கிய அமைச்சர்கள் கே.என்.நேரு, சு.முத்துசாமி, எ.வ.வேலு மற்றும் முன்னணி தலைவர்கள் ஈரோட்டில் முகாமிட்டு வீதி வீதியாக சென்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கை சின்னத்தில் வாக்குகள் சேகரித்து வருகிறார்கள்.

எதிர் முகாமான அ.தி.மு.க. கூட்டணியில் வேட்பாளர் அறிவிப்பு எப்போது என்று எதிர்பார்த்து இருந்தாலும் அ.தி.மு.க. கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.வி.ராமலிங்கம் ஆகியோர் பல்வேறு பகுதிகளிலும் வாக்குகள் சேகரித்தனர். இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு வேட்பாளராக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டார். இவர் அ.தி.மு.க. வேட்பாளராக களத்தில் இறங்கி பணியை தொடங்கினார். ஆனால், நேற்று முன்தினம் மாலை அ.தி.மு.க. (ஓ.பன்னீர்செல்வம் அணி) சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக செந்தில்முருகன் என்பவர் அறிவிக்கப்பட்டார். இது அ.தி.மு.க.வினருக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருப்பது உண்மை.

சூடுபிடித்தது

இருந்தாலும் வேட்பாளர்கள் அறிவிப்பை தொடர்ந்து ஈரோட்டில் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது. வீதிகள் தோறும் அரசியல் கட்சியினர் படை எடுத்து தங்கள் ஆதரவாளர்களுக்கு வாக்குகள் சேகரித்து வருகிறார்கள்.

தி.மு.க. கூட்டணி சார்பில் நேற்று முன்தினம் பல்லாயிரக் கணக்கானவர்களை திரட்டி நடத்தப்பட்ட செயல்வீரர்கள் கூட்டம், ஆளும் கட்சி தரப்பில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே தொடர்ந்து வீடுகள் தோறும் பிரசாரத்தை முடுக்கி விட்டு உள்ளனர். இதனால் ஈரோட்டில் பரபரப்பான காட்சிகள் அரங்கேறி வருகின்றன.

போலீஸ் பாதுகாப்பு

முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகமான மாநகராட்சி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

தேர்தல் பிரசாரத்துக்காக தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் கட்சியினர் ஈரோட்டை முற்றுகையிட்டு உள்ளனர். இதனால் கரை வேட்டிகள் ரெயில் நிலையம், பஸ் நிலையம், தங்கும் விடுதிகளில் அதிக எண்ணிக்கையில் சுற்றி வருகிறார்கள். வாகன போக்குவரத்தும் கடந்த சில நாட்களாக அதிகரித்து உள்ளன.

வாகன நெரிசல்

தேர்தல் ஜூரம் பற்றி உள்ள இந்த நிலையில் இன்னும் வாகனங்கள் அதிகரிக்கும். ஆனால், ஈரோட்டின் முக்கிய சாலையான சத்தி ரோடு பணி காரணமாக பவானி ரோடு இணைப்பு சாலைகள் அடைத்து வைக்கப்பட்டு இருக்கின்றன. இந்த பகுதிகள் முழுவதும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்டவை. எனவே வீரப்பன்சத்திரம், சத்தி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்பவர்கள் பவானி ரோட்டில் அசோகபுரம், லட்சுமி தியேட்டர், பி.பி.அக்ரகாரம் செல்வது, அங்கிருந்து வீரப்பன்சத்திரம் வருவது என்றால் பல கிலோ மீட்டர்கள் சுற்றி வரவேண்டியது உள்ளது. இதனால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. எனவே தேர்தல் வரை தற்காலிகமாக வாகனங்கள் வந்து செல்லும் வகையில் சாலைகளை திறக்க வேண்டியது அவசியமாக உள்ளது.

இதுபோல் ஈ.வி.என்.ரோட்டில் சாலை ஓரம் குழி தோண்டப்பட்டு இருப்பதால் அங்கும் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அவசர கால தேவைக்கு செல்லும் வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்வதற்கு கூட சிரமப்படும் சூழல் உள்ளது. தேர்தல் பரபரப்பு ஒரு பக்கம் இருந்தாலும், மக்களுக்கு இடையூறு இல்லாத வாகன போக்குவரத்து இருக்கும் வகையில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்