பழுதடைந்த குழாய்களை சீரமைக்கும் பணி மும்முரம்
கூடலூர்-ஓவேலி சாலையில் பழுதடைந்த குழாய்களை சீரமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது.
கூடலூர்
கூடலூர்-ஓவேலி சாலையில் பழுதடைந்த குழாய்களை சீரமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது.
ராட்சத குழாய்கள்
கூடலூர் நகராட்சி பகுதியில் 21 வார்டுகளில் சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் அத்தியாவசிய தேவைக்காக ஓவேலி பேரூராட்சி பகுதியில் ஹெலன், பல்மாடி, ஆத்தூர் உள்ளிட்ட தடுப்பணைகளில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் கூடலூர் நகருக்கு குடிநீர் கொண்டு வரப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் கூடலூர்-ஓவேலி சாலையில் உள்ள கெவிப்பாரா, ஒத்தக்கடை உள்பட பல இடங்களில் ராட்சத குழாய்கள் பழுதடைந்து குடிநீர் வீணாகியது. இது குறித்து பொதுமக்கள் தரப்பில் இருந்து பல்வேறு புகார்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு வந்தது.
சீரமைப்பு பணி
இதைத்தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் பிரான்சிஸ் சேவியர் உத்தரவின் பேரில் பொறியாளர் பார்த்தசாரதி, பணி மேற்பார்வையாளர் ஆல்தொரை, குழாய் ஆய்வாளர் ரமேஷ் மற்றும் நகராட்சி ஊழியர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் கெவிப்பாரா, ஒத்தக்கடை பகுதியில் செல்லும் பழுதடைந்த ராட்சத குழாய்களை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதற்காக பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு நிலத்தை தோண்டும் பணி மேற்கொள்ளப்பட்டது.
ஒத்துழைக்க வேண்டும்
இதனிடையே கூடலூர் நகரில் குடிநீர் வினியோகம் வழங்கும் பணியும் பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். எனினும் ராட்சத குழாய்களை சீரமைக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.
இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறும் போது, ராட்சத குழாய்களை சீரமைக்கும் பணி நடைபெறுவதால் குடிநீர் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.