மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே பரபரப்பு-பேட்டரி வெடித்து பானிபூரி குடோனில் தீ
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே பேட்டரி வெடித்து பானிபூரி குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் நேபால்சிங், பானிபூரி வியாபாரி. இவரது தலைமையில் 20-க்கும் மேற்பட்டவர்கள், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே வடக்கு மாசி வீதி ராமாயண சாவடி பகுதியில் வீடு எடுத்து தங்கி உள்ளனர். இவர்கள் நகரின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பானி பூரி விற்பனை செய்து வருகின்றனர். நேற்று காலை அவர்கள் குடியிருந்த வீட்டின் முதல் மாடியில் உள்ள பானிபூரி குடோனில் 3 பேட்டரிகளை சார்ஜ் ஏற்றுவதற்காக மின்சாரத்துடன் இணைத்து வைத்திருந்தனர். அப்போது பேட்டரி திடீரென்று வெடித்து தீவிபத்து ஏற்பட்டது. உடனே அக்கம்பக்கத்தினர் இது குறித்து தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சற்று நேரத்தில் தீ அந்த வீடு முழுவதும் பரவியது. தீயணைப்புத்துறையினர் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். இந்த விபத்தில் அந்த வீட்டில் மாடியில் இருந்த பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. சம்பவம் குறித்து திலகர்திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்ைப ஏற்படுத்தியது.