வெண்ணந்தூரில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகனங்கள்

வெண்ணந்தூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2022-10-27 19:00 GMT

வெண்ணந்தூர்

வெண்ணந்தூர் பேரூராட்சி

வெண்ணந்தூர் பேரூராட்சியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களும் உள்ளனர். இங்கு பிரதான தொழிலாக விசைத்தறி கூடங்கள், தொழிற்சாலைகள் மற்றும் விவசாயம் இருந்து வருகிறது. இவர்கள் பல்வேறு தேவைகளுக்காக வெண்ணந்தூர் பகுதிக்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.

மேலும் இங்குள்ள கால்நடை மருத்துவமனை, போலீஸ் நிலையம் என்று முக்கிய தேவைக்காக அதிகமானோர் வெண்ணந்தூர் வந்து செல்கிறார்கள். இதுதவிர வெண்ணந்தூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து தொழிற்சாலைகளுக்கு வெளி மாநிலத்தவர்களும், பள்ளி, கல்லூரிகளுக்கு வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கானோரும் வந்து செல்கின்றனர்.

போக்குவரத்து நெரிசல்

இங்கு ஆட்டையாம்பட்டி, இளம்பிள்ளை, மல்லூர், சேலம், ராசிபுரம், ஆத்தூர், நாமக்கல் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் வந்து செல்கின்றன. பஸ் நிலையம் இல்லாததாலும், போதிய இட வசதி இல்லாததாலும் பஸ்கள் ஒன்றன் பின், ஒன்றாக சாலையில் வரிசையாக பயணிகளை ஏற்றுவதற்கும், இறக்குவதற்கும் நிற்கின்றன. இதனாலும், காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி பஸ்கள் அதிக அளவில் வந்து செல்வதினாலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நகர பகுதிக்குள் பஸ்கள் வந்தாலும் கழிப்பறை, காத்திருப்பு அறை, வாகன காப்பகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

பேரூராட்சியின் மையப்பகுதியில் பஸ் நிறுத்தம் அமைந்து உள்ளதால் மாரியம்மன் கோவில் பண்டிகை உள்ளிட்ட விழாக்காலங்களில் போக்குவரத்தில் மாற்றம் செய்ய முடியாமல் கடும் நெரிசல் ஏற்படுகிறது. மேலும் பஸ் நிறுத்தம் அருகே அரசு மருத்துவமனை, மார்க்கெட், வணிக நிறுவனங்கள் உள்ளன. மார்க்கெட் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வரும் சரக்கு வாகனங்களை சாலையில் நிறுத்துவதால் இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனால் பேரூராட்சி பகுதியில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில் பஸ்கள் வரும் வழி ஒருவழிப்பாதையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வெகு நாளாக உள்ளது. மேலும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், பேரூராட்சியின் வெளிப்பகுதியில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

இதுகுறித்து வெண்ணந்தூரை சேர்ந்த விசைத்தறி அதிபர் குணசேகரன் கூறியதாவது:-

வெண்ணந்தூர் பகுதியில் பல ஆண்டுகாலமாக போக்குவரத்து நெரிசல் இருக்கின்றது. வெண்ணந்தூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் இருந்து காமராஜர் சிலை வரை போக்குவரத்து நெரிசல் இல்லாத நாள் இல்லை என்றே கூறலாம். குறிப்பாக காலை, மாலை நேரங்களில் அதிக அளவு போக்குவரத்து நெரிசல் இருக்கின்றது. புதிதாக வெண்ணந்தூர் பகுதிக்கு பஸ் நிலையம் அமைத்து கொடுத்தால் ஓரளவு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியும். மேலும் சாலையின் இருபுறங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மக்கள் இயல்பான நிலையில் செல்வதற்கு வழிவகை செய்து கொடுக்க வேண்டும். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பஸ் நிலையம் அமைக்க வேண்டும்

சமூக ஆர்வலர் ரத்தினவேல்:-

எங்கள் பகுதியில் பல நேரங்களில் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்களை பொதுமக்கள் நிறுத்தி வைத்து உள்ளனர். இதனால் அந்த வழியாக பஸ்கள் செல்ல முடியாமல் பஸ் டிரைவர்கள் கீழே இறங்கி வந்து, சாலையில் உள்ள இருசக்கர வாகனங்களை அப்புறப்படுத்தி விட்டு பிறகு செல்லும் நிலை உள்ளது. மேலும் எங்கள் பகுதி முழுவதும் விசைத்தறிக்கூடங்கள் செயல்படுவதினால் இருசக்கர வாகனத்தில் நூல் ஏற்றி செல்கின்றனர். கூட்ட நெரிசலில் செல்லும் போது விபத்துக்கு உள்ளாகும் நிலை உருவாகின்றது.

மேலும் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் காரணமாக பள்ளி, கல்லூரி வாகனங்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. பஸ் நிலையம் இல்லாததால் பயணிகள் வெயில் மற்றும் மழையில் நின்று பஸ் ஏறிச் செல்லும் நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைத்து கொடுத்தால், போக்குவரத்து நெரிசல் குறையும் என நம்புகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்