ஆண்டிப்பட்டாக்காடு கிராமத்தில் புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கம்
ஆண்டிப்பட்டாக்காடு கிராமத்தில் புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கப்பட்டது. இதனை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
அரியலூர் மாவட்டம் ஆண்டிப்பட்டாக்காடு கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று புதிய வழித்தடத்தில் அரசு பஸ் இயக்கப்பட்டது. இதனை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா முன்னிலை வகித்தார். இந்த நகர பஸ் தடம் எண் 22ஏ அரியலூர் - ஏலாக்குறிச்சி வழிதடத்தில் வல்லாகுளம், சிலுப்பனூர் இடையே ஆண்டிப்பட்டாக்காடு பிரிவு சாலையிலிருந்து 1 கி.மீட்டர் தொலைவில் உள்ள ஆண்டிப்பட்டாக்காடு கிராமத்தினை தொட்டு இயக்கப்படும். இந்த பஸ் காலை 7.50 மணிக்கு ஏலாக்குறிச்சியில் இருந்து புறப்பட்டு அரியலூரை சென்றடையும். மீண்டும் இந்த பஸ் மாலை 5.25 மணிக்கு அரியலூரில் இருந்து புறப்பட்டு ஏலாக்குறிச்சியை சென்றடையும். இதன் மூலம் இப்பகுதி மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மிகுந்த பயனடைவார்கள்.
இந்தநிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) லிட், திருச்சி மண்டல பொது மேலாளர் சக்திவேல், அரசு போக்குவரத்து கழக அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.