பஸ்-மினி லாரி மோதல்; டிரைவர் பலி
பஸ்-மினி லாரி மோதல்; டிரைவர் பலியானார்.;
முசிறி அருகே உள்ள அய்யம்பாளையம் பாரதிநகரை சேர்ந்த அண்ணாவி மகன் மதிவாணன் (வயது 34). இவர் சொந்தமாக மினி லாரி வைத்து ஓட்டி வந்தார். நேற்று வழக்கம்போல் பால் கேன்களை ஏற்றுவதற்காக மதிவாணன் மினி லாரியில் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். மினி லாரி நாமக்கல் - திருச்சி நெடுஞ்சாலையில் ஆமூர் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது, எதிரே முசிறி நோக்கி சென்ற தனியார் பஸ்சும், மினிலாரியும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மினி லாரியின் முன்பக்கம் முற்றிலும் சேதம் அடைந்து அப்பளம் போல் நொறுங்கியது. இதில் மினி லாரியின் டிரைவர் மதிவாணன் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வாத்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய்கோல்டன் சிங் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மதிவாணனை மீட்டு சிகிச்சைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த வாத்தலை போலீசார் தனியார் பஸ் டிரைவர் முசிறி அருகே உள்ள எம்.புதுப்பட்டியைச் சேர்ந்த ராஜா (45) என்பவரை கைது செய்தனர். இந்த விபத்தில் பலியான மினிலாரி டிரைவர் மதிவாணனுக்கு திருமணமாகி பாலாமணி என்ற மனைவியும் (30), லத்திகா (7), சபரிவாசன் (5) ஆகிய 2 குழந்தைகளும் உள்ளனர்.