விபத்து நஷ்ட ஈடு வழங்காத பஸ் ஜப்தி

ராசிபுரத்தில் விபத்து நஷ்ட ஈடு வழங்காத அரசு பஸ்சை ஜப்தி செய்தனர்.

Update: 2022-09-27 20:05 GMT

ராசிபுரம்

நஷ்ட ஈடு

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காமாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 32). அவர் கடந்த 2009-ம் ஆண்டு மோட்டார் சைக்கிளில் சேலம் நோக்கி சென்றார். அப்போது அவர் ராசிபுரம் அருகே உள்ள சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அத்தனூர் எம்.ஜி.ஆர். காலனி அருகே சென்ற போது பின்னால் வந்த அரசு பஸ் மோதி இறந்தார்.

இது குறித்து விபத்து நஷ்ட ஈட்டு தொகை வழங்கும்படி ராசிபுரம் சார்பு நீதிமன்றத்தில் கருப்புசாமி குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த அப்போதைய சார்பு நீதிமன்ற நீதிபதி 2011-ம் ஆண்டு ரூ.9 லட்சத்து 89 ஆயிரத்து 64 நஷ்ட ஈட்டுத் தொகையை 7.5 சதவீத வட்டியுடன் விபத்தில் இறந்த கருப்புசாமி குடும்பத்தினருக்கு வழங்கும்படி உத்தரவிட்டார்.

பஸ் ஜப்தி

நஷ்ட ஈட்டு தொகையை வழங்காததால் நிறைவேற்று மனுவை ராசிபுரம் சார்பு நீதிமன்றத்தில் அவரது குடும்பத்தினர் தாக்கல் செய்தனர். விபத்து நஷ்ட ஈட்டுத்தொகையை செலுத்தாததால்2019-ம் ஆண்டு சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழக பஸ்சை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இதையொட்டி சேலம் கோட்டத்தை சேர்ந்த கொல்லிமலை செல்லும் அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர். அப்போது போக்குவரத்து கழகத்தினர் அசல் வட்டியுடன் செலுத்தவேண்டிய ரூ.14 லட்சத்து 11 ஆயிரத்தில் ரூ.11 லட்சத்து 45 ஆயிரத்தை செலுத்தி விட்டு மீதி தொகையை பிறகு செலுத்துவதாக கூறி பஸ்சை எடுத்து சென்றனர்.

3 ஆண்டுகளுக்கு மேலாகியும் விபத்து நஷ்டஈட்டு மீதிதொகை ரூ.2 லட்சத்து 66 ஆயிரம் செலுத்தாததால் கடந்த 2-ந் தேதி அரசு பஸ்சை ஜப்தி செய்ய ராசிபுரம் சார்பு நீதிமன்ற நீதிபதி தீனதயாளன் உத்தரவிட்டார். இதையொட்டி நேற்று சார்பு நீதிமன்ற ஊழியர்கள் பாபு மற்றும் பரணிதரன் ராசிபுரம் பஸ் நிலையத்தில் நின்ற கொல்லிமலை செல்லும் அரசு போக்குவரத்துக் கழக பஸ்சை மீண்டும் ஜப்தி செய்து கோர்ட்டுக்கு எடுத்துச் சென்றனர். நேற்று ஜப்தி செய்யப்பட்ட அதே அரசு பஸ்சை ஏற்கனவே 2019-ம் ஆண்டும் ஜப்தி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்