கார் மீது பஸ் மோதல்; 5 பேர் படுகாயம்
உளுந்தூர்பேட்டையில் கார் மீது பஸ் மோதிய விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
உளுந்தூர்பேட்டை,
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே விஜயமாநகரம் புதுஆதண்டார் கொள்ளை கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 31). சம்பவத்தன்று இவர் தனது நண்பர்களான ஸ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்த சிவராஜ், பெண்ணாடம் அருள்முருகன் (37), செல்வகுமார் (40) மற்றும் சின்னசேலம் பகுதியை சேர்ந்த குமரேசன் (31) ஆகியோருடன் காரில் விருத்தாசலத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை வழியாக சென்னை விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றார். காரை சக்திவேல் ஓட்டினார். உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் உள்ள சேந்தநாடு குறுக்கு சாலையில் சென்றபோது, எதிரே அந்த வழியாக வந்த தனியார் பஸ் எதிர்பாராதவிதமாக கார் மீது மோதியது. இந்த விபத்தில் சக்திவேல் உள்பட 5 பேரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.இது குறித்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.