செல்போன் பறிப்பு கொள்ளையர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதி பஸ் தீப்பிடித்து எரிந்தது - தாம்பரம் பஸ் நிலையம் அருகே பரபரப்பு
தாம்பரம் பஸ் நிலையம் அருகே செல்போன் பறிப்பு கொள்ளையர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதி பஸ் தீப்பிடித்து எரிந்தது.;
சென்னை வடபழனி பஸ் நிறுத்தத்தில் நேற்று அதிகாலையில் பஸ்சுக்காக நின்றிருந்த சிவா(வயது 41) என்பவரிடம் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் செல்போனை பறித்துவிட்டு தாம்பரம் நோக்கி மின்னல் வேகத்தில் தப்பினர். செல்லும் வழியில் சென்னை விமான நிலையம் நுழைவு வாயில் அருகில் நின்றிருந்த முகமது இப்ராகிம் (35) என்பவரிடமும் செல்போனை பறித்து விட்டு வேகமாக தப்பிச் சென்றனர்.
தாம்பரம் பஸ் நிலையம் அருகே வேகமாக சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார்சைக்கிள், ஜி.எஸ்.டி. சாலை ஓரம் நிறுத்தி இருந்த தனியார் நிறுவனங்களுக்கு ஊழியர்களை ஏற்றிச்செல்லும் பஸ் மீது பயங்கரமாக மோதியது.
அப்போது மோட்டார்சைக்கிளில் உள்ள பெட்ரோல் டேங்க் மூடி கழன்று பெட்ரோல் வெளியேறியதால் மோதிய வேகத்தில் மோட்டார்சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது. மளமளவென பஸ்சுக்கும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. உடனடியாக கொள்ளையர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் பஸ், மோட்டார்சைக்கிள் இரண்டும் முற்றிலும் எரிந்து நாசமானது. இதையடுத்து செல்போன் பறிப்பு தொடர்பாக வடபழனி மற்றும் விமான நிலைய போலீசாரும், பஸ், மோட்டார்சைக்கிள் தீப்பிடித்தது குறித்து தாம்பரம் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.