இருசனாம்பட்டி கோவில் திருவிழாவில் 25 மாடுகள் பங்கேற்ற எருதாட்டம்

வீரபாண்டி அருகே முனியப்பன் கோவில் திருவிழாவையொட்டி 25 மாடுகள் பங்கேற்ற எருதாட்டம் நடந்தது

Update: 2023-05-15 23:02 GMT

பனமரத்துப்பட்டி:

முனியப்பன் கோவில்

வீரபாண்டி ஒன்றியம் சென்னகிரி இருசனாம்பட்டியில் உள்ள முனியப்பன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத பொங்கல் விழாவும், அதனை தொடர்ந்து எருதாட்டமும் நடைபெறுவது வழக்கம். கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக எருதாட்டம் நடைபெறவில்லை.

இந்த நிலையில் நேற்று கோவிலில் பொங்கல் விழா நடைபெற்றது. முன்னதாக காலை முனியப்பனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையடுத்து பக்தர்கள் ஆடு, கோழிகள் பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

எருதாட்டம்

இதனை தொடர்ந்து இளம்பிள்ளை, சின்னப்பம்பட்டி, அமரகுந்தி, முனியம்பட்டி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 25-க்கும் மேற்பட்ட மாடுகள் வரவழைக்கப்பட்டு எருதாட்டத்துக்கு தயார்படுத்தப்பட்டது. கோவில் அருகே உள்ள விளையாட்டு மைதானத்தில் ஒவ்வொரு மாடுகளும் தனித்தனியாக அனுமதிக்கப்பட்டு எருதாட்டம் நடைபெற்றது.

இதில் ஏராளமான வாலிபர்கள் நீண்ட கம்பால் செய்த பொம்மையை எருதின் முன்பு காட்ட அது மிரண்டு ஓடியது. பின்னர் வாலிபர்கள் அதனை இழுத்து பிடித்து எருதாட்டம் நடத்தினர். இதை காண ஏராளமானோர் கோவில் முன்பு திரண்டிருந்தனர். அசம்பாவிதங்களை தவிர்க்க 100-க்கு மேற்பட்ட போலீசார், டாக்டர் குழுவினர் தயார் நிலையில் இருந்தனர்.

மேலும் செய்திகள்