கூடலூரில் புத்தரி திருவிழா கொண்டாட்டம்-குலதெய்வ கோவில்களில் நெற்கதிர்களை வைத்து வழிபாடு

கூடலூரில் புத்தரி என அழைக்கப்படும் நெல் அறுவடை திருவிழா கொண்டாடப்பட்டது. தொடர்ந்து குலதெய்வ கோவில்களில் நெற்கதிர்களை வைத்து ஆதிவாசி மக்கள், மவுண்டாடன் செட்டி சமூகத்தினர் வழிபாடு நடத்தினர்.

Update: 2022-10-27 18:45 GMT

கூடலூர்

கூடலூரில் புத்தரி என அழைக்கப்படும் நெல் அறுவடை திருவிழா கொண்டாடப்பட்டது. தொடர்ந்து குலதெய்வ கோவில்களில் நெற்கதிர்களை வைத்து ஆதிவாசி மக்கள், மவுண்டாடன் செட்டி சமூகத்தினர் வழிபாடு நடத்தினர்.

புத்தரி திருவிழா கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் பனியர், குரும்பர், காட்டு நாயக்கர் என ஆதிவாசி மக்களும், மவுண்டாடன் செட்டி சமூகத்தினரும் வசித்து வருகின்றனர். தலைமுறைகள் மாறினாலும் தங்களது பாரம்பரிய பண்டிகைகள், வழிபாடுகளை இன்று வரை கடைபிடித்து வருகின்றனர். பெரும்பான்மையாக விவசாயம், கூலி வேலைகள் செய்து வருகின்றனர். கூடலூர் பகுதியில் ஜூன் மாதம் பருவமழை தொடங்கும் சமயத்தில் விவசாய பணி தொடங்குவதற்காக ஆயத்தமாகின்றனர்.

பின்னர் குலதெய்வ வழிபாடு செய்து நெல் நடவு பணியில் ஈடுபடுகின்றனர். பின்னர் நாற்றுகளில் நெற்கதிர்கள் முளைத்து விளைய தொடங்கும் சமயத்தில் தங்களது குலதெய்வ கோவில்களில் நெற்கதிர்களை படையலிடுவதற்காக புத்தரி எனும் அறுவடை திருவிழாவை ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 10 -ந் தேதி கொண்டாடி வருகின்றனர்.

வயலில் சிறப்பு பூஜை

இதற்காக 2 வாரத்துக்கு முன்பாக ஆதிவாசி மக்கள் மற்றும் மவுண்டாடன் செட்டி சமூகத்தினர் விரதம் கடை பிடிக்கின்றனர். நேற்று கூடலூர் புத்தூர் வயலில் புத்தரிசி எனும் நெல் அறுவடை திருவிழா நடைபெற்றது. காலை 9 மணிக்கு புத்தாடை அணிந்து வயலில் ஆதிவாசி மக்கள் இறங்கினர். பின்னர் குலதெய்வத்துக்கு படையலிடுவதற்கான நெற்கதிர்களை தேர்வு செய்தனர். தொடர்ந்து பாரம்பரிய இசைக்கருவிகளான மேளதாளங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் செய்தனர்.

பின்னர் நெற்கதிர்களை அறுவடை செய்து ஒன்றாக கட்டினர். தொடர்ந்து அங்கு இருந்து புத்தூர் வயல் பகுதியில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு ஊர்வலமாக ஆதிவாசி மக்கள் மற்றும் மவுண்டாடன் செட்டி சமூகத்தினர் சென்றனர். அங்கு நெற்கதிர் கட்டுகளை பிரித்து புத்தூர் வயல் மகாவிஷ்ணு, பகவதி அம்மன், நம்பாலக்கோட்டை, தேவாலா வேட்டைக்கொரு மகன் உள்ளிட்ட கோவில்களுக்கு சிறு கட்டுகளாக பிரித்து ஆதிவாசி மக்கள் எடுத்து சென்றனர்.

கோவில்களில் வழிபாடு

தொடர்ந்து கோவில்களில் வைத்து நெற்கதிர்களை சுவாமிக்கு படையலிட்டு வழிபாடு செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ெநற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது. முன்னதாக ஆதிவாசி மற்றும் கோத்தர் இன மக்கள் பாரம்பரிய நடனமாடி கொண்டாடினர். இதைத்தொடர்ந்து இனிவரும் நாட்களில் சுற்றுவட்டார பகுதியில் விளைந்த நெற்கதிர்களை அந்தந்த பகுதியில் ஆதிவாசி மக்கள் அறுவடை திருவிழா கொண்டாட உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்