மதுரை மாநகராட்சியில் ரூ.57 லட்சம் பற்றாக்குறை

மதுரை மாநகராட்சியில் ரூ.57 லட்சம் பற்றாக்குறை பட்ஜெட் போடப்பட்டுள்ளது.

Update: 2023-03-31 18:53 GMT

மதுரை மாநகராட்சியில் ரூ.57 லட்சம் பற்றாக்குறை பட்ஜெட் போடப்பட்டுள்ளது.

வருவாய்

மதுரை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்து மேயர் இந்திராணி பேசியதாவது:- கடந்த மாநகராட்சி பட்ஜெட்டில் ஒவ்வொரு வார்டின் கவுன்சிலர்களுக்கும் வார்டு மேம்பாட்டு நிதியாக ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்த தொகையை உயர்த்த வேண்டும் என்று ஒவ்வொரு கவுன்சிலர்களும் கேட்டு கொண்டனர். அந்த அடிப்படையில் இந்த தொகை ரூ.10 லட்சமாக தற்போது உயர்த்தப்பட்டு உள்ளது. மதுரை மாநகராட்சியில் இந்த நிதியாண்டில் மாநகராட்சியின் சொந்த வருவாய் ரூ.468 கோடியே 44 லட்சமும், அரசின் பல்வேறு திட்டங்களில் கிடைக்கும் மானியம் ரூ.1098.77 கோடியும், திட்டங்களுக்கு கடனாக ரூ.189.04 கோடியும் என மொத்தம் வருவாய் ரூ.1,751.25 கோடியாக இருக்கிறது.

அதேபோல் பணியாளர் மற்றும் நிர்வாக செலவினமாக ரூ.418.29 கோடியும், மூலதன செலவினமாக ரூ.1151.47 கோடியும், இயக்கம் மற்றும் பராமரிப்பு செலவினமாக ரூ.168.43 கோடியும், கடன் திரும்ப செலுத்தல் ரூ.13.63 கோடியும் என மொத்தம் செலவினமாக ரூ.1751.82 கோடி இருக்கிறது.

அழகான மதுரை

மதுரை மாநகராட்சியின் பட்ஜெட், மக்கள் நலனை மேம்படுத்தி அடிப்படை கட்டமைப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்து உருவாக்கப்பட்டுள்ளது. மதுரை நகரை புதுயுக மாநகராக கட்டமைப்பதற்கான திட்டமிடலை கொண்ட தொலைநோக்கு பட்ஜெட்டாக அமைந்துள்ளது. நல்ல முறையில் திட்டங்களை செயல்படுத்தி மக்களுக்கான மாமன்றமாக நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு முதல்-அமைச்சரின் கனவை நனவாக்குவோம். நம் மதுரையை மாமதுரையாக, அழகான மதுரையாக எல்லா வகையிலும் தன்னிறைவு பெற்ற மதுரையாக மாற்றி காட்டுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

மாநகராட்சி பட்ஜெட்டில் மொத்த வருவாய் ரூ.1,751.25 கோடியும், செலவு ரூ.1751.82 கோடியும், மொத்த பற்றாக்குறை ரூ.57 லட்சமும் இருக்கிறது. 

Tags:    

மேலும் செய்திகள்