மத்திய அரசு பட்ஜெட் எப்படி?- பொருளாதார நிர்புணர்கள், பொதுமக்கள் கருத்து

Update: 2023-02-01 18:45 GMT

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் எப்படி? என்பது குறித்து பொருளாதார நிபுணர்களும், பொதுமக்களும் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

அதன் விவரம் வருமாறு:-

முதலீடுகள் அதிகரிக்க வாய்ப்பு

நிதி ஆலோசகர் வ.நாகப்பன்:-

மத்திய அரசின் 2023-24 பட்ஜெட்டில் விவசாயிகள், கிராமப்புறங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. நடுத்தர மக்களையும் கவனத்தில் கொண்டு தனி நபர் வருமான வரி உச்சவரம்பை உயர்த்தி உள்ளது வரவேற்புக்குரியது. கிராமப்புறங்களில் 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் தொடங்கப்படும் என்ற அறிவிப்பு இளைஞர்களிடையே விவசாயம் மற்றும் சுயத்தொழில் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும். இன்றைய நவீன தொழில்நுட்பத்தை விவசாயத்தில் புகுத்தி நல்ல லாபம் பெற ஏதுவாக இருக்கும். குழந்தைகளுக்கான 'டிஜிட்டல்' நூலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு சிறப்புக்குரியது. மறைமுக வரிகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் உள்நாட்டு முதலீடுகள் கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் வேலைவாய்ப்புகள் உண்டாகும். இன்றைய சூழலில் அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தும் முயற்சியாக இந்த 'பட்ஜெட்'டை மத்திய அரசு தயாரித்து உள்ளது என்று நான் கருதுகிறேன். ஆனால் அதே நேரத்தில் இந்த அறிவிப்புகள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வியப்பை தரும் 'பட்ஜெட்'

பொருளாதார பேராசிரியர் வெங்கடசாமி:-

'அனைத்து தரப்பினருக்கும், அனைத்தும்' என்ற நோக்கில் உலகமே வியக்கும் வகையில், இந்திய பொருளாதாரத்தை ஒளிர செய்யும் 'பட்ஜெட்' இது. கால்நடை வளர்ப்பு, மீன்வளத்துறைக்கு ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு, கிராமப்புறங்களில் வேளாண் 'ஸ்டார்ட்-அப்' நிறுவனங்கள் தொடங்க ஊக்குவிப்பு, விவசாயிகளுக்கான கடன் தொகை அதிகரிப்பு, வர்த்தக புரிதலை எளிமையாக்கும் வகையில் 39 ஆயிரத்துக்கும் அதிகமான நடைமுறைகள் நீக்கம், ஒருங்கிணைந்த வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யும் நடைமுறை என நல்ல பல அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. கூட்டுறவு தரவுதளம் தொடங்கப்பட்டு, அதில் மீன்பிடி தொழிலாளர்கள் இணைக்கப்படும் என்ற அறிவிப்பு நல்ல அறிவிப்பாகும். 'ஒருங்கிணைந்த வசதி, கடைசிவரை வசதி, நிதித்துறை கட்டமைப்பு வசதி' என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த 'பட்ஜெட்' நிச்சயம் இந்திய பொருளாதாரத்தை முன்னேற்ற செய்யும் பட்ஜெட் ஆகும். அனைத்து தரப்பு மக்களையும் திருப்திபடுத்தும், அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்றத்தை தரும் பட்ஜெட்டாகவும் இருக்கிறது. அந்தவகையில் இது கவர்ச்சிகரமான, அதேவேளை வியப்பை தரும் பட்ஜெட்டாகவும் அமைந்திருக்கிறது.

சமூக கட்டமைப்பை மேம்படுத்தும்

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜி.சந்தானம்:-

2024-ம் ஆண்டு தேர்தலை அடிப்படையாக கொண்டு அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தும் வகையில் இந்த பட்ஜெட் உள்ளது. நடுத்தர மக்களுக்கு வருமான உச்சவரம்பு ரூ.7 லட்சமாக உயர்வு, ஏழைகளுக்கான பிரதமர் வீடுகட்டும் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு ரூ.70 ஆயிரம் கோடியாக உயர்வு, நகர்ப்புற கட்டமைப்புக்கு ஆண்டுதோறும் ரூ.10 ஆயிரம் கோடி, 47 லட்சம் இளைஞர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி என்ற அம்சங்கள் வரவேற்கத்தக்கது. பொதுவாக, இந்த பட்ஜெட் சமூக கட்டமைப்பை மேம்படுத்துகிற ஒன்றாக உள்ளது. இந்த பலத்தால் தான் இந்தியா பொருளாதார சிக்கல்களை இதுவரை சிறப்பாக சமாளித்து வந்துள்ளது. ஜி20 மாநாட்டின் குறிக்கோள்களான சுகாதாரம், மரபுசாரா எரிசக்தி உபயோகத்தை அதிகரித்தல், இயற்கை வளங்களை முறையாக பயன்படுத்துதல் ஆகியவற்றை இந்த பட்ஜெட் ஊக்கப்படுத்தி உள்ளது. 5ஜி-யை வேலை வாய்ப்புக்கும், விவசாயத்துக்கும், விவசாயப்பொருட்களை சந்தைப்படுத்தவும் பயன்படுத்த முன்வந்திருப்பது பாராட்டத்தக்கது. இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள மத்திய அரசின் அடிப்படை கட்டமைப்புக்கான நிதி ஒதுக்கீட்டு அதிகரிப்பை அதிகபட்ச அளவில், தமிழ்நாடு அரசு தனதாக்கிக்கொள்ள சிறப்பு திட்டங்கள் வகுத்து, தனிமுயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்

அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன்:- விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவோம் என்று 2019-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலும், கொள்கை முடிவாகவும் மத்திய பா.ஜ.க. அரசு தெரிவித்தது. அதை வலியுறுத்தியும், 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற கோரியும் டெல்லியில் ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் நீண்ட போராட்டத்தை முன்னெடுத்ததை நாடே மறந்திருக்க முடியாது. இந்தநிலையில் தற்போதைய மத்திய அரசின் பட்ஜெட்டில் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம், வேளாண் சட்டங்கள் ரத்து போன்ற முக்கிய அறிவிப்புகள் இடம்பெறவில்லை. பாரம்பரிய விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுப்போம் என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் மரபணு மாற்றப்பட்ட விதை பயிர்களை அனுமதிக்கிறார்கள். விவசாயிகளுக்கு கடன் கொடுப்போம் என்கிறார்கள். முதலில் வங்கிகளில் ஏற்கனவே வாங்கிய கடனை கட்ட முடியாமல், கருப்பு பட்டியலில் இருக்கும் விவசாயிகளுக்கு கடன்பெறும் தகுதியை மத்திய அரசு பெற்றுக்கொடுக்கட்டும். இப்படி பல முரண்பாடுகள் கொண்டதாகவே மத்திய அரசின் பட்ஜெட் இருக்கிறது. பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் திட்டங்களும், சலுகைகளும் முழுக்க முழுக்க கார்ப்பரேட்களுக்காகவே போடப்பட்டு இருக்கிறது. இந்த பட்ஜெட் விவசாயிகளுக்கு ஏமாற்றம் தரும் பட்ஜெட்டாகவே அமைந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல.

பொருளாதார மந்தம்

ஓசூர் சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகள் சங்க (ஹோஸ்டியா) தலைவர் வேல்முருகன்:-

அடிப்படை கட்டுமானங்கள், மின்னணு பொருட்களின் இறக்குமதி மற்றும் உற்பத்தி, மரபுசாரா எரிசக்தி திறன் வளர்ப்பு போன்ற அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கு உண்டான நிதியை ஒதுக்கி உள்ளார். உலகளவில் பொருளாதார மந்தம், விலைவாசி உயர்வு போன்ற பிரச்சினைகள் உள்ள நிலையில் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி, விலைவாசி உயர்வு போன்றவை திருப்தி அளிக்க கூடிய வகையில் இருந்தாலும், வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அதற்குண்டான முன்னெடுப்புகள் இன்னும் அதிகப்படியாக செய்யலாம் என தோன்றுகிறது.

குறிப்பாக சிறு, மற்றும் குறுந்தொழில் நடத்துபவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா பிரச்சினைகளால் தடுமாறி கொண்டு இருக்கிறார்கள். இந்த நிறுவனங்களை காப்பாற்ற எந்த விதமான சிறப்பு திட்டங்களும் நிதி நிலை அறிக்கையில் கொடுக்கப்படவில்லை. கடந்த சில ஆண்டுகளாக தாக்கல் செய்யப்படும் மத்திய நிதி நிலை அறிக்கை ஒரு பாலிசி டாக்குமெண்ட், கேபிடல் எக்ஸ்பண்டிச்சர் பிளான் போல் இருக்கிறது.

இந்த இலக்கை எட்ட என்ன மாதிரியான சிஸ்டம் உருவாக்கப்பட்டு, எப்படி இந்த இலக்கை அடைய போகிறோம் என்ற மைக்ரோ பிளான் சேர்த்து இந்த நிதிநிலை அறிக்கையை கொடுத்தால் அனைவரும் எளிதாக புரிந்து கொள்ள முடியும். பட்ஜெட் இன்று மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மக்கள் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களுக்கான விற்பனை வரி ஏற்படுத்தப்பட்டு மக்களவையில் இருந்து ஜி.எஸ்.டி. கவுன்சிலிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.மத்திய நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்யும் போது ஜி.எஸ.டி. கவுன்சில் வரம்புக்குள் வரக்கூடிய வரி விகித முறையை, மாற்ற கூடிய முறையாக மக்களவையில் தாக்கல் செய்ய வேண்டும் என்பது எங்களின் கோரிக்கை. இந்த நிதி நிலை அறிக்கை சிறு, குறுந்தொழில் நடத்துபவர்களின் உண்மை பிரச்சினையை ஆராய வல்லுனர் குழுவை அமைத்து இந்த குழுவின் உண்மை நிலையை நாட்டு மக்களுக்கு தெரிவிக்கவும் தேவையான நிதி மற்றும் ஆதரவு கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும் என்பது எங்களின் கோரிக்கை

கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு

தனியார் கல்லூரி பேராசிரியர் குபேந்திரன்:-

மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு என ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 899 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதை தவிர பாதுகாப்பு, உணவு பொது வினியோகம், சாலை போக்குவரத்து, உள்துறை, ரெயில்வே துறைகளுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தனிநபர் வருமான வரி உச்ச வரம்பு ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது வரவேற்ககூடியது. இதன் மூலம் அதிகளவில் மக்கள் பயன் பெறுவார்கள். மேலும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட உச்ச வரம்பும் ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சம் வரையில் உயர்த்தப்பட்டுள்ளது வரவேற்ககூடியது.

தனி நபர் வருமானம்

ஆடிட்டர் இர்பான் சுன்னா:-

மத்திய அரசின் பட்ஜெட்டில் தனி நபருக்கு ஆண்டுக்கு ரூ.7 லட்சம் வரையில் வருமான வரி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது வரவேற்க கூடியதாகும். வருமான வரி விலக்கிற்கான உச்ச வரம்பும் ரூ.3 லட்சமாக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருப்பது வரவேற்க கூடிய அம்சமாகும்.

ஏற்கனவே ரூ.5 லட்சம் வரையில் இருந்த தனி நபர் வருமான வரி உச்ச வரம்பு தற்போது ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதால் ஏராளமான நடுத்தர மக்கள் பயன் பெறுவார்கள். தனி நபருக்கான உச்சபட்ச வரியும் 42 சதவீதத்தில் இருந்து 40 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

இந்த பட்ஜெட்டால் செல்போன், டி.வி. உள்ளிட்டவை விலை குறைய வாய்ப்புகள் உள்ளதாகவும், அதே நேரத்தில் தங்கம், வெள்ளி விலை உயர வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டு இருக்கிறது. மக்களின் அத்தியாவசிய தேவையான பெட்ரோல், டீசல் விலை குறைப்பு தொடர்பாக அறிவிப்புகள் எதுவும் இருந்தாலும், கிருஷ்ணகிரி ரெயில்வே பாதை திட்டம் தொடர்பான அறிவிப்புகள் இருந்தால் மேலும் நன்றாக இருந்து இருக்கும்.

மேலும் செய்திகள்