டாக்டர் வீட்டு கதவை உடைத்து பணம் திருட்டு

பாளையங்கோட்டையில் டாக்டர் வீட்டு கதவை உடைத்து பணம் திருடிய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-05-25 19:57 GMT

பாளையங்கோட்டை பெருமாள்புரம் மகிழ்ச்சிநகர் கலைஞர்நகரை சேர்ந்தவர் மாணிக்கவாசகம். இவருடைய மகன் முத்துச்சாமி (வயது 36). டாக்டராக உள்ளார்.

இவர் கடந்த 15-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தோடு சொந்த ஊரான நாங்குநேரிக்கு சென்று விட்டார்.

இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் கிரில் கதவில் உள்ள பூட்டு மற்றும் கதவு ஆகியவற்றை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு கோவிலுக்கு செல்வதற்காக 5 உண்டியல்களில் சேர்த்து வைத்திருந்த ரூ.1½ லட்சத்தை திருடிச் சென்றனர்.

மேலும் வீட்டிலிருந்த விலை உயர்ந்த 15 பட்டு சேலைகளையும் எடுத்துவிட்டு பின்பக்க வழியாக சென்றுவிட்டனர்.

இந்த நிலையில் நேற்று இரவில் முத்துச்சாமி வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதையடுத்து நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் மர்மநபர்களை உடனே பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவத்தையொட்டி நெல்லை மாநகர போலீசார் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்