வீட்டின் கதவை உடைத்து 2 கிலோ வெள்ளி திருட்டு
நாகர்கோவிலில் வீட்டின் கதவை உடைத்து 2 கிலோ வெள்ளி குத்துவிளக்குகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் வீட்டின் கதவை உடைத்து 2 கிலோ வெள்ளி குத்துவிளக்குகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த துணிகர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
மகள் வீட்டுக்குச் சென்றார்
நாகர்கோவில் அருகே உள்ள வெள்ளாடிச்சிவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதரன். இவருடைய மனைவி ராமச்சந்திராள் (வயது 66). இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். ஸ்ரீதரன் இறந்துவிட்டார். இரண்டு மகன்களும் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்கள். மகளுக்கு திருமணம் ஆகி விட்டது. அவர் ராமச்சந்திராள் வீட்டின் அருகில் உள்ள தெருவில் வசித்து வருகிறார். அவருடைய கணவரும் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
இதனால் ராமச்சந்திராள் தினமும் இரவு மகள் வீட்டுக்கு தூங்க செல்வது வழக்கம். மாலை நேரத்தில் மட்டும் தனது வீட்டிற்கு வந்து செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி விட்டு செல்வார். அதே போல்நேற்று முன்தினமும் வழக்கம் போல் மாலை வீட்டுக்கு வந்து செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி விட்டு, கதவை பூட்டிவிட்டு மகள் வீட்டுக்கு சென்றார்.
2 கிலோ வெள்ளி திருட்டு
இந்தநிலையில் காலை வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அக்கம் பக்கத்தினர் ராமச்சந்திராளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர், மகளுடன் வீட்டுக்கு வந்தார். கோட்டார் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயன் மற்றும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த இரண்டு வெள்ளி குத்துவிளக்குகளை காணவில்லை. குத்துவிளக்கு ஒவ்வொன்றும் ஒரு கிலோ எடை கொண்டதாகும். எனவே வீட்டின் கதவை உடைத்்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் 2 கிலோ எடை கொண்ட வெள்ளி குத்துவிளக்குகளை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகியிருந்த மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். போலீசார் மோப்பநாயையும் வரவழைத்தனர்.அது வீட்டில் மோப்பம் பிடித்துவிட்டு வீட்டை சுற்றி சுற்றி வந்தது.
வலைவீச்சு
வீட்டில் இருந்த கண்காணிப்புக் கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை மட்டுமே கண்காணிப்பு கேமரா செயல்பட்டுள்ளது. அதன் பிறகு கண்காணிப்பு கேமராக்கள் செயல் படாததால் எந்த காட்சிகளும் பதிவாகவில்லை. இதனால் அருகில் ஏதாவது கண்காணிப்புக் கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளதா? அவற்றில் மர்ம நபர்களின் நடமாட்டம் பதிவாகி உள்ளதா? என்பது குறித்து போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
ராமச்சந்திராள், தினமும் மகள் வீட்டில் போய் தங்குவதை நோட்டமிட்ட மர்மநபர்கள் இந்த கைவரிசையை காட்டியுள்ளனர் என போலீசார் தெரிவித்தனர். எனவே இந்த கொள்ளை சம்பவத்தில் உள்ளூர் திருடர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுகுறித்து கோட்டார் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.