"அரசின் திட்டங்களை மக்களிடம் விரைவாக கொண்டு சேருங்கள்" - மக்கள் தொடர்பு அலுவலர்களுக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவுரை

அரசின் திட்டங்கள், சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் தொடர்பு அலுவலர்களுக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவுரை வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

Update: 2022-05-19 02:23 GMT

சென்னை,

செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் 18-ந் தேதி (நேற்று) மண்டல இணை இயக்குனர்கள் மற்றும் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களின் பணி ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆற்றிய தலைமையுரை வருமாறு:-

விடுதலைப் போராட்டத் தியாகிகள், மொழிக் காவலர்கள் மற்றும் தமிழறிஞர்கள் ஆகியோரை கவுரவிக்கவும், வருங்காலச் சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையிலும், அவர்களுக்கு சிலைகள் மற்றும் அரங்கங்களை அமைக்க பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில், கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளைக் காலதாமதமின்றி விரைந்து முடித்து அவற்றைச் செயல்படுத்த உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மாவட்ட கலெக்டர்களை மண்டல இணை இயக்குனர்கள் தொடர்பு கொண்டு, இப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பணிகளில் இடர்பாடுகள் மற்றும் சந்தேகங்கள் இருந்தால் மண்டல இணை இயக்குனர்களும், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களும் தலைமையிடத்தில் இருந்து அறிவுரைகளைப் பெற்று பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

உண்மைத் தகவல்களைத் தாங்கி காலப் பெட்டகமாகத் திகழும், தமிழரசு இதழைப் பொதுமக்களிடம் அதிக அளவில் விளம்பரப்படுத்த வேண்டும். தமிழரசு இதழ் சந்தா சேர்க்க அவரவருக்கு அளிக்கப்பட்ட இலக்கை ஒரு வார காலத்திற்குள் முடிக்க வேண்டும்.

மாவட்டங்களில் உள்ள, மக்களால் அறியப்படாத விடுதலைப் போராட்டத் தியாகிகள், மொழிக் காவலர்கள், தமிழறிஞர்கள் மற்றும் முக்கியத் தலைவர்கள் ஆகியோர்களின் புகைப்படங்களைப் பெற்று, அவர்களைப் பற்றிய சிறு குறிப்பு தயார் செய்து, மக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களான மாவட்ட ஆட்சியரகம், முக்கியப் பேருந்து நிலையங்களில் உள்ள வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் உரிய அனுமதி பெற்று புகைப்படக் கண்காட்சியை அமைக்கவும், காலப்பேழையாக தயாரித்து வைக்கவும் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மாவட்டங்களில் தனியார் பொருட்காட்சிகளை அரசின் வழிமுறைகளைப் பின்பற்றி நடத்த வேண்டும். அரசின் திட்டங்களையும், சாதனைகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை அர்ப்பணிப்புடன் எவ்விதத் தொய்வுமின்றி விரைவாக மேற்கொள்ள வேண்டும். இந்த ஆண்டில், செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக முதல்-அமைச்சர் அறிவித்துள்ள அறிவிப்புகளையும், செய்தித் துறையின் மானியக் கோரிக்கை அறிவிப்புகளையும் விரைந்து செயல்படுத்த திட்டம் வகுத்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் செயலாளர் மகேசன் காசிராஜன் முன்னிலை உரையாற்றினார். செய்தி மக்கள் தொடர்புத்துறையின் இயக்குனர் வீ.ப.ஜெயசீலன் வரவேற்புரை ஆற்றினார். கூடுதல் இயக்குனர்கள் தி.அம்பலவாணன், ச.பாண்டியன் மற்றும் இணை இயக்குனர்கள், துணை இயக்குனர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்