அம்பையில் பாலம் இடிப்பு; போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வந்தது

அம்பையில் பாலங்கள் இடிக்கப்பட்டதையொட்டி போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வந்தது.

Update: 2023-04-27 20:32 GMT

அம்பை:

அம்பையில் பாலங்கள் இடிக்கப்பட்டதையொட்டி போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வந்தது

பாலம் இடிப்பு

நெல்லை மேலப்பாளையம் முதல் பாபநாசம் வரையிலான சாலை விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக அம்பை கிருஷ்ணன் கோயில் அருகில் நதியுண்ணிக் கால்வாயில் கட்டப்பட்டுள்ள பாலம் நேற்று மதியம் 2 மணிக்கு ராட்சத பொக்லைன் எந்திரத்தை கொண்டு இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. எனவே அந்த வழியாக செல்லும் வாகனங்களின் போக்குவரத்தில் கீழ்கண்டவாறு மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளர் விஷ்ணுவர்த்தன் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து மாற்றம்

அதன்படி கல்லிடைக்குறிச்சியில் இருந்து அம்பைக்கு வரும் கார், ஆட்டோ, மோட்டார்சைக்கிள் போன்ற இலகுரக வாகனங்கள் கல்லிடை-அம்பை தாமிரபரணி ஆற்றுப்பாலத்தை அடுத்துள்ள பாலத்தடி இசக்கி அம்மன் கோவில் வழியாக திரும்பி காசிநாதர் கோவில் முன்பாக சென்று அம்பை ஆற்றுச்சாலை வழியாகவும், முக்கூடலில் இருந்து வரும் இலகுரக வாகனங்கள் தீர்த்தபதி பள்ளி அருகே அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மாற்றுப்பாதை வழியாகவும் அம்பை நகருக்குள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கல்லிடைக்குறிச்சி வழியாக அம்பாசமுத்திரம் வரும் அரசு பஸ்கள் அம்பை - கல்லிடை மெயின்ரோட்டில் உள்ள அரோமா பள்ளி திடல் வரை வந்து திரும்பிச் செல்லும். பொதுமக்கள் அரசு மருத்துவமனை அருகில் உள்ள கால்வாயில் கரை பகுதியில் நடந்து செல்வதற்கு பாதை செப்பனிடப்பட்டுள்ளது. பாபநாசம், தென்காசியில் இருந்து நெல்லை செல்லும் அரசு பஸ்கள் மற்றும் வள்ளியூர் நாகர்கோவில் செல்லும் பஸ்கள் வாகைக்குளம் விலக்கு வழியாக வந்து அம்பை யூனியன் அலுவலகம் முன்பாக திரும்பி இடைகால், பாப்பாக்குடி வழியாகச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குடிநீர் வினியோகம் பாதிப்பு

அம்பை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாலம் இடிக்கப்பட்டுள்ளதால் அவ்வழியாக சென்ற குடிநீர் குழாய்களும் அகற்றப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மேலும் குடிநீர் வினியோகம் செய்வது தடைபட்டுள்ளதால் பணி முடியும் வரை ஏற்படும் அசவுகரியங்களை பொதுமக்கள் பொறுத்து கொள்ள வேண்டும். பணி முடியும் வரை குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சுழற்சி முறையில் வாகனங்களில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும் நகர்மன்ற தலைவர் பிரபாகர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்