7 மாதங்களாக ஆமை வேகத்தில் நடக்கும் பாலம் கட்டும் பணி

7 மாதங்களாக ஆமை வேகத்தில் நடக்கும் பாலம் கட்டும் பணி

Update: 2023-01-16 10:44 GMT

பொங்கலூர்

பொங்கலூரில் இருந்து தேவனம்பாளையம் செல்லும் சாலையில் கடந்த 7 மாதங்களாக பாலம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடப்பதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ரூ.4 கோடியில் பணி

பொங்கலூர் கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து தேவனம்பாளையம் வழியாக திருப்பூருக்கு செல்லும் தார்ச்சாலை உள்ளது. இந்த தார்ச்சாலை தேவனாம்பாளையம் வரை சாலை அகலப்படுத்தும் பணி மற்றும் பாலம் அகலப்படுத்தும் பணி ரூ.4 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டது. கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த சாலை பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வந்தது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் தார் சாலை பணிகள் முடிவுற்றது.

இந்த தார் சாலை பணிகள் நடைபெற்ற போது இந்த வழியாக தடுப்புகள் அமைக்கப்பட்டதால் பல கிலோமீட்டர் சுற்றி திருப்பூர் செல்ல வேண்டிய நிலை பொது மக்களுக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் இந்த சாலையில் பி.ஏ.பி வாய்க்கால் குறுக்காக ஏற்கனவே இருந்த பாலத்தை அகலப்படுத்தும் பணி தொடங்கப்பட்டது. இந்த பணியும் மிக மிக மெதுவாக தொடங்கப்பட்டது.

பொது மக்களுக்கு குழப்பம்

எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம் என்ற சூழ்நிலை கருதி அவ்வப்போது தடுப்புகள் அமைக்கப்பட்டு இந்த வழியாக வாகனங்கள் செல்வது தடை செய்யப்பட்டது. இதனால் ஒருநாள் பாதையை திறந்து விடுவதும், அடுத்த சில தினங்களில் பாதையை அடைப்பதுமாக இருந்ததால் பொது மக்களுக்கு கடும் குழப்பம் ஏற்பட்டது. பாலத்தின் அருகில் வந்து விட்டு மீண்டும் திரும்பி கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வந்து அதன் பின்பு மற்ற பாதை வழியாக திருப்பூருக்கு செல்ல வேண்டிய சிரமம் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது.

இந்த பாலம் கட்டும் பணியை அதிகாரிகள் வந்து பார்வையிடுவதில் காலதாமதம் ஏற்படுகிறதா? ஏன் அதிகாரிகள் இந்த பணியை பார்வையிட்டு துரிதமாக செய்யாமல் காலம் தாழ்த்துகிறார்கள்? என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது. மக்களுக்கான பணிகளை அவர்கள் நன்மை கருதி குறிப்பிட்ட காலத்தில் முடிக்க வேண்டியது அதிகாரிகளின் கடமை. அதை விடுத்து தேவையில்லாமல் காலம் தாழ்த்தி பணிகளை கிடப்பில் போடுவது பொது மக்களுக்கு தரும் தொந்தரவாகவே கருதப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் போது ஒப்பந்ததாரரிடம் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

எந்திரங்கள் வருகை

நேற்று பாலத்தில் கம்பி கட்டும் பணிகள் முடிவுற்று கான்கிரீட் அமைப்பதற்காக காலையிலேயே தொழிலாளர்கள் வந்து காத்திருந்தனர். அதற்காக கலவை எந்திரங்களும் வந்து நின்றது. ஆனால் மாலை வரையிலும் இந்த பணிகள் நடைபெறவில்லை. இது குறித்து கேட்டபோது, அதிகாரிகள் வந்து பார்வையிட்ட பின்பு பணிகள் தொடங்கப்படும் என அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். எனவே அதிகாரிகள் உடனடியாக பாலம் கட்டும் பணியை பார்வையிட்டு விரைவில் முடித்து பாதையை திறந்து விட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்