பாம்பன் ரோடு பாலத்துக்கு வயது 35
இன்றுடன் 34 வயதை கடந்து 35-வது வயதில் பாம்பன் ரோடு பாலம் அடியெடுத்து வைக்கிறது.
ராமேசுவரம்,
இன்றுடன் 34 வயதை கடந்து 35-வது வயதில் பாம்பன் ரோடு பாலம் அடியெடுத்து வைக்கிறது.
ரோடு பாலம்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்துடன் ராமேசுவரம் தீவை இணைப்பதில் பாம்பன் கடல் நடுவே அமைந்துள்ள ரெயில் பாலத்திற்கும், அதனை ஒட்டி அமைந்த ரோடு பாலத்துக்கும் முக்கிய பங்கு உள்ளன.
இதில் பாம்பன் ரோடு பாலத்தின் கட்டுமான பணி கடந்த 1973-ம் ஆண்டு ரூ.20 கோடி நிதியில் தொடங்கப்பட்டது. 15 ஆண்டுகள் நடைபெற்று வந்த இந்த பணிகள் 1988-ம் ஆண்டு முடிவடைந்தன.
தொடர்ந்து அக்டோபர் மாதம் 2-ந் தேதி அன்று பாம்பன் ரோடு பாலத்தை அப்போதைய பிரதமர் ராஜிவ்காந்தி திறந்து வைத்ததை தொடர்ந்து, சாலை போக்குவரத்து தொடங்கப்பட்டது.
கடலுக்குள் 79 தூண்களை கொண்டு இந்த பாலம் கட்டப்பட்டு உள்ளது. இதன் மைய பகுதி ஸ்ப்ரிங் பேரிங் இணைப்புகளால் கட்டப்பட்டு உள்ளது.
அதுபோல் தினமும் பாம்பன் ரோடு பாலம் வழியாக ஏராளமான வாகனங்கள் ராமேசுவரம் சென்று வருகின்றன. கடலுக்குள் அமைந்துள்ள ரோடு பாலத்தை சுற்றுலா பயணிகள் அனைவரும் மிகுந்த ஆச்சரியத்தோடு பார்த்து ரசித்து செல்கின்றனர். ஆசியாவில் கடலுக்குள் அமைந்துள்ள மிக நீளமான பாலங்களில் பாம்பன் ரோடு பாலமும் ஒன்றாகும்.
35 வயது
இந்த ரோடுபாலம் தனது சேவையை தொடங்கி, 34 ஆண்டுகளை கடந்து 35-வது ஆண்டை இன்று தொடங்குகிறது.
தற்போது பாம்பன் ரோடு பாலத்தை ரூ.16 கோடியில் சீரமைக்கும் பணிகள் கடந்த 8 மாதத்திற்கு மேலாகவே நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை இன்னும் 8 மாதத்திற்குள் முடிக்க தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். மேலும் பாம்பன் ரோடு பாலத்துக்கு புதிய வர்ணம் பூசப்பட்டு, நிறம் மாற உள்ளதாகவும் தேசிய நெடுஞ்சாலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.