செஞ்சி கோட்டையில் பதற்றம் கமலக்கண்ணி அம்மன் சிலை உடைப்பு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

செஞ்சி கோட்டையில் கமலக்கண்ணி அம்மன் சிலையை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்திய சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-08-15 17:42 GMT


செஞ்சி,

செஞ்சியில் ராஜகிரி மற்றும் கிருஷ்ணகிரி கோட்டைகள் உள்ளன. இதில் ராஜகிரி கோட்டையின் மேல் பகுதியில் பிரசித்தி பெற்ற கமலக்கண்ணி அம்மன் கோவில் அமைந்துள்ளது.

நேற்று காலை வழக்கம் போல் பூசாரி ராமச்சந்திரன் பூஜை செய்வதற்காக வந்தார். அப்போது, அங்கிருந்த கமலக்கண்ணி அம்மன் சிலையின் கை மற்றும் கால்கள் உடைக்கப்பட்டு இருந்தது.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், அறங்காவலர் அரங்க ஏழுமலை மற்றும் கோட்டை அலுவலகருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் அங்கு வந்து பார்த்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் கோவிலுக்குள் வந்து சிலையின் கை மற்றும் கால்களை உடைத்து சேதப்படுத்தி சென்று இருப்பது தெரியவந்தது.

முற்றுகை

இதற்கிடையே சம்பவம் பற்றி அறிந்த செஞ்சி பீரங்கி மேடு பகுதி மக்கள் செஞ்சி கோட்டைக்கு திரண்டு வந்து, அங்கிருந்த கோட்டை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் சிலையை சேதப்படுத்தியவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். போலீசில் புகார் அளித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.


பின்னர் இது தொடர்பாக அறங்காவலர் அரங்க ஏழுமலை மற்றும் செஞ்சி கோட்டை அலுவலர் நவீந்திரா ரெட்டி ஆகியோர் செஞ்சி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி, அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்