சிதம்பரம்,
சிதம்பரம் அருகே அண்ணாமலைநகர் வடக்குமாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார், இவருடைய மனைவி சுலோச்சனா (வயது 42). இந்த நிலையில் சுலோச்சனா தனது வீட்டை பூட்டி விட்டு வடலூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் வீட்டின் ஒரு அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 20 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. அதனை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது. திருடுபோன நகையின் மொத்த மதிப்பு ரூ.7 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து சுலோச்சனா அளித்த புகாரின் பேரில் அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.