பொள்ளாச்சி நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் 364 பள்ளிகளில் காலை உணவு திட்டம்

பொள்ளாச்சி நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் 364 பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

Update: 2023-08-26 20:30 GMT

பொள்ளாச்சி

தமிழகம் முழுவதும் அரசு தொடக்கப்பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது. பொள்ளாச்சி நகராட்சி, வடக்கு, தெற்கு, ஆனைமலை ஆகிய ஒன்றியங்களில் உள்ள ஊராட்சிகள், பேரூராட்சிகளிலும் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. இதையொட்டி பொள்ளாச்சி நகராட்சி பள்ளிகள், ஜமீன்ஊத்துக்குளி, சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு உணவு சமைக்க கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.27 லட்சம் செலவில் சமையல் கூடம் கட்டப்பட்டு உள்ளது. இங்கிருந்து உணவுகள் வாகனங்கள் மூலம் எடுத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதேபோன்று ஊராட்சிகளில் அந்தந்த பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களில் உணவு சமைக்கப்படுகிறது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில் உள்ள 13 பள்ளிகள், ஜமீன்ஊத்துக்குளி, சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிகளில் தலா 4 பள்ளிகளிலும், தெற்கு ஒன்றியத்தில் சமத்தூர் பேரூராட்சி, 26 கிராம ஊராட்சிகளில் 56 பள்ளிகளிலும், வடக்கு ஒன்றியத்தில் நெகமம் பேரூராட்சியில் 4 பள்ளிகள், 39 ஊராட்சிகளில் 87 பள்ளிகள் உள்பட 91 பள்ளிகளிலும், ஆனைமலை ஒன்றியத்தில் கோட்டூர், ஆனைமலை பேரூராட்சிகள், 19 ஊராட்சிகளில் 81 பள்ளிகளில், வால்பாறையில் 61 பள்ளிகள், கிணத்துக்கடவில் 62 பள்ளிகள் சேர்த்து மொத்தம் 364 பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தில் மொத்தம் 12,380 பேர் பயன் பெறுகின்றனர். வாரத்தில் திங்கட்கிழமை ரவா உப்புமா, கோதுமை ரவா உப்புமா, பொங்கல், அரிசி உப்புமா, சேமியா கிச்சடி ஆகியவற்றுடன் அனைத்து காய்கறிகளுடன் கூடிய சாம்பார் தினமும் வழங்கப்படுகிறது. உணவுகள் தரமானதாக வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்