கண்மாயில் மண் அள்ளியதில் விதிமீறல்; கலெக்டர் ஆய்வு செய்ய கோரிக்கை

கம்பம் அருகே கேசவபுரம் கண்மாயில் விதியை மீறி அதிக அளவில் மண் அள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் ஆய்வு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-08-08 21:00 GMT

கம்பம் அருகே கேசவபுரம் கண்மாயில் விதியை மீறி அதிக அளவில் மண் அள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் ஆய்வு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வண்டல் மண்

கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டியில் இருந்து சுருளி அருவி செல்லும் சாலையில் கேசவபுரம் கண்மாய் உள்ளது. 33 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கண்மாய் மூலம் 100 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் காமயகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கிணறுகளின் நிலத்தடி நீர்மட்ட உயர்வுக்கு இந்த கண்மாய் முக்கிய ஆதாரமாக உள்ளது. பொதுப்பணித்துறையின் மஞ்சளாறு வடிநில கோட்ட கட்டுப்பாட்டில் உள்ள இந்த கண்மாய் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்தது. இதனால் கண்மாயில் ஆங்காங்கே மண் மேடுகளும், செடி, கொடிகள் வளர்ந்து காணப்பட்டன. இதனால் பருவமழை கைகொடுத்தாலும் கண்மாயில் முழுமையாக தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை இருந்தது.

இதற்கிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதாவது, தேனி மாவட்டத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கண்மாய், குளங்களை எளிதாக தூர்வாரும் வகையில், கண்மாய், குளங்களில் வண்டல் மண் எடுக்க வருவாய்த்துறையினர் மூலம் விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து கண்மாய், குளங்களில் மேடான பகுதிகளில் உள்ள வண்டல் மண்ணை அள்ளும் பணி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, கம்பத்தில் உள்ள உடைப்படி, ஒட்டுக்குளம், மஞ்சள்குளம், கேசவபுரம் கண்மாய்களில் மண் அள்ளுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

விதிமீறல்

ஆனால் கேசவபுரம் கண்மாயில் வண்டல் மண் அள்ளுவதில் விதி மீறப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இந்த கண்மாயில் அரசு விதிமுறையை மீறி விவசாய நிலங்களுக்கு மண் அள்ள அனுமதி பெற்று, வணிக நோக்கத்தோடு கட்டுமானம் மற்றும் செங்கல் சூளைகளுக்கு மண் அள்ளிச்செல்வதாக கூறப்படுகிறது. மேலும் விவசாயிகளின் பெயரில் தனிநபர்கள் கண்மாயில் பொக்லைன் எந்திரம் மூலம் விதியை மீறி 10 அடி ஆழத்துக்கு வண்டல் மண்ணை அள்ளி சென்றுள்ளனர். இதனால் கண்மாயில் பல்வேறு இடங்களில் பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.

எனவே கண்மாயில் விதியை மீறி மண் அள்ளப்பட்டது குறித்து மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்ய வேண்டும். மேலும் மண் அள்ளியதில் விதிகளை மீறிய நபர்கள் மீதும், அதற்கு உடந்தையாக இருந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் கண்மாயில் பள்ளங்களை மூடி கண்மாயை சமன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்