போலீஸ் நிலையத்தில் புகுந்து ரகளை செய்த வாலிபர் கைது
நெல்லையில் போலீஸ் நிலையத்தில் புகுந்து ஜன்னல் கண்ணாடியை உடைத்து ரகளை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லையில் போலீஸ் நிலையத்தில் புகுந்து ஜன்னல் கண்ணாடியை உடைத்து ரகளை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
போலீஸ் நிலையத்துக்கு மதுபோதையில் வந்த வாலிபர்
நெல்லை தச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் ஆரோக்கிய மேரி. இவர் அயல்பணி காரணமாக கடந்த சில நாட்களாக நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 13-ந்தேதி இரவில் வழக்கம்போல் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்தார்.
அப்போது இரவில் அங்கு மதுபோதையில் வாலிபர் ஒருவர் வந்தார். அவர் தன்னை சிலர் தாக்கி விட்டனர் என்றும், அவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று கூறி, ஏட்டு ஆரோக்கிய மேரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அந்த வாலிபர் அங்கிருந்து சென்று விட்டார்.
ஜன்னல் கண்ணாடியை உடைத்து ரகளை
தொடர்ந்து மறுநாள் அதிகாலையிலும் மீண்டும் போலீஸ் நிலையத்துக்கு அந்த வாலிபர் வந்தார். அவர், ஏட்டு ஆரோக்கிய மேரியிடம் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்தார். அப்போது அவர் போலீஸ் நிலையத்தில் எழுத்தர் அறையின் வடபுறம் உள்ள ஜன்னல் கண்ணாடியை கையால் தாக்கி உடைத்தார். அப்போது சிதறிய கண்ணாடி துண்டுகளில் ஒன்றை எடுத்த அவர், தன்னை யாரேனும் பிடிக்க வந்தால் குத்திக்கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்து ரகளையில் ஈடுபட்டு தப்பி சென்றார்.
இதுகுறித்து ஏட்டு ஆரோக்கியமேரி அளித்த புகாரின்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் சுவாதிகா 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் ரமேஷ் மோகன் விசாரணை நடத்தி, அந்த வாலிபரை கைது செய்தார்.
பல்வேறு குற்ற வழக்குகள்
விசாரணையில், அவர் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் திருப்புளியங்குடியைச் சேர்ந்த தற்போது நெல்லை கொக்கிரகுளத்தில் வசித்து வரும் அன்புராஜ் மகன் அருண்குமார் (வயது 30) என்பது தெரியவந்தது. கைதான அருண்குமார் மீது பாளையங்கோட்டை, நெல்லை சந்திப்பு உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
நெல்லையில் போலீஸ் நிலையத்தில் புகுந்து ஜன்னல் கண்ணாடியை உடைத்து ரகளை செய்த வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.