ஆஸ்பத்திரிக்குள் புகுந்து மிளகுத்தூள் 'ஸ்பிரே' அடித்து டாக்டரிடம் கொள்ளை; 4 பேர் கும்பலை மடக்கி பிடித்த போலீசார்
சோழிங்கநல்லூர், ஜன.31-சோழிங்கநல்லூரில் ஆஸ்பத்திரிக்குள் புகுந்து டாக்டர் முகத்தில் மிளகுத்தூள் ‘ஸ்பிரே’ அடித்து கத்திரிக்கோல் முனையில் பணம் பறித்த சம்பவத்தில் 4 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.;
மிரட்டி பணம் பறிப்பு
சோழிங்கநல்லூர் காந்தி நகரில் சதீஷ்குமார் வயது (28) என்பவர் கடந்த 3 ஆண்டுகளாக ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார். இந்த நிலையில், கடந்த 28-ந்தேதி இரவு சுமார் 10 மணியளவில் ஆஸ்பத்திரியை மூடுவதற்கு தயாரான போது, திடீரென மர்மநபர்கள் 2 பேர் உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் தாங்கள் வைத்திருந்த மிளகுத்தூள் ஸ்பிரேவை டாக்டர் சதீஷ்குமார் முகத்தில் அடித்தனர். பின்னர் ஆஸ்பத்திரியில் இருந்த கத்திரிக்கோலை எடுத்து கழுத்தில் வைத்து மிரட்டி அவரிடமிருந்து ரூ.20 ஆயிரத்தை பறித்தனர். மேலும் டாக்டரின் செல்போன் மற்றும் அவருக்கு சொந்தமான கார் சாவி ஆகியவற்றை எடுத்துக் கொண்டு அங்கு பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்து எடுத்து இருவரும் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர்.
பொதுமக்கள் தர்ம-அடி
இதையடுத்து உடனடியாக சுதாரித்துக்கொண்ட டாக்டர் அதிர்ச்சியில் கூச்சலிட்டார். இதனால் அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் திரண்டதால் பதற்றமடைந்த மர்மநபர்கள் இருவரும் தப்பி ஓடினர். பழைய மகாபலிபுரம் சாலை வழியாக தப்பிச்செல்ல முயன்றபோது, அச்சமயம் சாலையில் சென்று கொண்டிருந்த கார் மோதியதில் ஒருவர் கீழே விழுந்து காயமடைந்தார். மற்றொருவர் தப்பி ஓடினார். இதைத்தொடர்ந்து, காயமடைந்து கீழே கிடந்த அந்த நபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தனிப்படை போலீசார்
இது குறித்து தகவல் அறிந்த செம்மஞ்சேரி சப்-இன்ஸ்பெக்டர் ராகவன் தலைமையிலான போலீசார் சம்பவ விரைந்து வந்து பிடிபட்ட நபரை மீட்டு சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட டாக்டர் சதீஷ்குமார் செம்மஞ்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து செம்மஞ்சேரி போலீஸ் உதவி கமிஷனர் ரியாசுதீன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராகவன் உள்ளிட்ட போலீசார் அடங்கிய தனிப்படையினர் பிடிபட்டவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
3 பேர் கைது
போலீஸ் விசாரணையில், பிடிபட்ட நபர் பிரகாஷ் (38) என்பதும் தப்பி ஓடிய நபர் வெற்றிச்செல்வன் என்பதும் தெரியவந்தது. மேலும் பிரகாஷ் கொடுத்த தகவலின் பேரில், நீலாங்கரை சென்ற தனிப்படையினர் அங்கிருந்த வெற்றிச்செல்வன் (35), சத்தியசீலன் (36), பிரதாப் (36) ஆகிய 3 பேரை கைது செய்து அவர்கள் தங்கியிருந்த வீட்டை சோதனை செய்தனர். அப்போது வீட்டில் வைத்திருந்த ஏர்கன்-ஐ பறிமுதல் செய்து 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
திட்டம் தீட்டினர்
விசாரணையில், பாதிக்கப்பட்ட டாக்டர் சதீஷ்குமாரும் மற்றும் கைதான சிதம்பரத்தை சேர்ந்த சத்தியசீலன் ஆகிய இருவரும் சுமார் 10 ஆண்டுகளாக நண்பர்கள் என்பதும், இருவரும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்து விட்ட நிலையில், சதீஷ்குமாரிடம் அதிக பணம் இருப்பதையறிந்து நண்பர்களுடன் சேர்ந்து அவரிடம் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியதும் தெரியவந்தது. இதற்காக கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பிரகாஷ், பிரகாஷின் தம்பி பிரதாப், வெற்றிச்செல்வன் ஆகிய 3 பேருடன் இணைந்து சத்தியசீலன் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் கைதான 4 பேர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த செம்மஞ்சேரி போலீசார், ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
முன்னதாக கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்திய கத்திரிக்கோல், மிளகுத்தூள் ஸ்பிரே, கொள்ளையடித்த கார் சாவி, கண்காணிப்பு கேமரா, செல்போன், துப்பாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கைதான சத்தியசீலன் சென்னை பாலவாக்கத்தில் மருந்து கடை நடத்தி வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.