குளத்தின் கரை உடைப்பு; சேத பகுதிகளை எம்.எல்.ஏ. ஆய்வு

செங்கோட்டை அருகே குளத்தின் கரை உடைப்பால் ஏற்பட்ட சேத பகுதிகளை கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

Update: 2023-07-07 18:45 GMT

செங்கோட்டை:

செங்கோட்டை அருகே உள்ள மேக்கரை அடவிநயினார் அணைக்கு செல்லும் பகுதியில் அமைந்துள்ளது மேக்கரைக்குளம். இந்த குளத்தின் மூலம் சுமார் 300 ஏக்கர் பாசன வசதி பெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையால் இந்த குளத்தின் கரையானது வெள்ளத்தால் உடைந்து தண்ணீர் வயல்வெளிகளில் புகுந்தது. மேலும் அடவிநயினார் அணைக்கு செல்லும் பிரதான சாலையின் கற்கள் பெயர்ந்து வயல்வெளிகளில் நிரம்பி உள்ளது. மேலும் இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் சேதமடைந்து இருந்து வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினா் கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு அப்பகுதி விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னா் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு வெள்ளத்தால் உடைந்து போன குளத்தின் கரை மற்றும் பெயர்ந்து போன சாலைகளை போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொண்டு செப்பனிட அறிவுறித்தினார்.

நிகழ்ச்சியில் அச்சன்புதுார் பேரூராட்சி தலைவா் சுசிகரன், அண்ணா தொழிற்சங்க முன்னாள் மண்டலத்தலைவா் கந்தசாமி பாண்டியன், பேரூர் கழக செயலாளா்கள் முத்துக்குட்டி, கார்த்திக்ரவி, முன்னாள் பேரூர் கழக செயலாளா் முத்தழகு, மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு துணை தலைவா் ஞானராஜ் மற்றும் கழக சார்பு அணி நிர்வாகிகள், மேக்கரை கிளை செயலாளா் செய்யதுஉசேன், வார்டு செயலாளா்கள் சின்னக்கனி, ராசையா, விவசாயிகள் ஆறுமுகப்பாண்டி, முகம்மதுபாரூக் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Tags:    

மேலும் செய்திகள்