திருடிய ஆட்டுடன் வாலிபர் ஓட்டம்
சின்னசேலம் அருகே நள்ளிரவில் பரபரப்பு: திருடிய ஆட்டுடன் வாலிபர் ஓட்டம் பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்;
சின்னசேலம்
சின்னசேலம் அருகே கல்லாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 50). விவசாய தொழிலாளியான இவர் சம்பவத்தன்று தான் வளர்த்து வரும் 15 வெள்ளாடுகளை மேய்ச்சலுக்காக அழைத்து சென்றார். பின்னர் மாலையில் வீடு திரும்பி வந்த ராஜேந்திரன் அவரது வீட்டின் பின்புறம் உள்ள பட்டியில் ஆடுகளை அடைத்துவிட்டு இரவு தூங்க சென்றார்.
இந்த நிலையில் நள்ளிரவு இரவு 12 மணியளவில் மர்ம நபர் ஒருவர் பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கிடா ஆட்டின் வாயில் துணியை கட்டி திருடி சென்றதை பக்கத்து வீட்டை சேர்ந்த நபர் பார்த்து கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் திருடிய ஆட்டுடன் தப்பி செல்ல முயன்ற வாலிபரை துரத்தி பிடித்து சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் கள்ளக்குறிச்சி, ஏமப்பேர் வடக்குதெருவை சேர்ந்த பெரியசாமி மகன் தண்டபாணி(40) என்பதும், திருடிய ஆட்டுடன் தப்பி ஓட முயன்றபோது பொதுமக்களிடம் சிக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து தண்டபாணியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த ஆட்டையும் பறிமுதல் செய்தனர்.