மோட்டார் சைக்கிள் விபத்தில் சிறுவன், கல்லூரி மாணவர் சாவு

ஆறுமுகநேரி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் சிறுவன், கல்லூரி மாணவர் பலியானார்கள்.

Update: 2022-06-12 17:28 GMT

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் சிறுவன், கல்லூரி மாணவர் பலியானார்கள்.

பாதயாத்திரை வந்தனர்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி கட்டனூர் பகுதியை சேர்ந்தவர் கணேசமூர்த்தி (வயது 40). இவர் அப்பகுதியில் உள்ள ரேஷன் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவியும், ஒரு மகன் மற்றும் 2 மகள்களும் உள்ளனர்.

இவர்கள் அப்பகுதியை சேர்ந்த உறவினர்கள் உள்ளிட்டோருடன் பாதயாத்திரையாக திருச்செந்தூர் கோவிலுக்கு வந்தனர். நேற்று முன்தினம் திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு இரவில் அங்கு தங்கினர். பின்னர் நேற்று காலையில் திருச்செந்தூரில் இருந்து ஒரு மினி லாரியில் ஊருக்கு புறப்பட்டனர்.

சிறுவன் மீது மோதியது

ஆறுமுகநேரி அருகே உள்ள சீனந்தோப்பு விலக்கு பகுதியில் வந்தபோது மினிலாரியை டிரைவர் சாலையோரம் நிறுத்தினார். அப்போது எதிர்ப்புறம் அன்னதானம் நடைபெற்று கொண்டிருந்ததால் கணேசமூர்த்தியின் மகன் யுகனேஷ் (7) தண்ணீர் குடிப்பதற்காக சாலையை கடந்து சென்றான்.

அந்த சமயத்தில் கல்லூரி மாணவர்களான தூத்துக்குடி கதிர்வேல்புரத்தை சேர்ந்த கருப்பசாமி மகன் கார்த்திக் (20), அவரது நண்பர் தூத்துக்குடி ராஜகோபால் நகரைச் சேர்ந்த ராமதாஸ் மகன் இசக்கிராஜா (20) ஆகியோர் திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடி நோக்கி ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை கார்த்திக் ஓட்டினார். கண் இமைக்கும் நேரத்தில், சாலையை கடக்க முயன்ற சிறுவன் யுகனேஷ் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.

2 பேர் சாவு

இதில் யுகனேஷ், கார்த்திக், இசக்கிராஜா ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதனை பார்த்து யுகனேசின் பெற்றோர் பதறி துடித்தனர். உடனடியாக 3 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு திருச்செந்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், யுகனேஷ், இசக்கிராஜா ஆகிய 2 பேரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

விபத்தில் படுகாயம் அடைந்த கார்த்திக்கிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

ஆறுமுகநேரி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் சிறுவன், கல்லூரி மாணவர் பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்