கள்ளக்குறிச்சியில் புத்தகத்திருவிழா அமைச்சர் எ.வ.வேலு இன்று தொடங்கி வைக்கிறார்
கள்ளக்குறிச்சியில் நடைபெற உள்ள புத்தகத்திருவிழாவை இன்று அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைக்கிறார்.
கலெக்டர் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்ட நூலக துறை சார்பில் கள்ளக்குறிச்சி நீலமங்கலம் மேம்பாலம் அருகில் உள்ள திடலில் இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு கல்லை புத்தகத்திருவிழா நடைபெறவுள்ளது. இதில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு புத்தகத்திருவிழாவை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார். இந்த புத்தகத்திருவிழா வருகிற 25-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
விழாவில் மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பட்டிமன்றம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. இதற்கான அரங்குகள், விழா மேடைகள் அமைக்கும் பணி நடைபெற்றது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பட்டிமன்றம்
அதன்பிறகு கலெக்டர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக அரசு சார்பில் 15.12.2022 முதல் 25.12.2022-ந் தேதி வரை 11 நாட்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதன்முறையாக புத்தகத்திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. தினமும் தமிழ் சிந்தனையாளர்களின் சிறப்பு பட்டிமன்றம், கருத்தரங்கம், பல்சுவை நிகழ்ச்சிகள், இலக்கியம் சார்ந்த சொற்பொழிவுகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.
இதுதவிர குழந்தைகள் விளையாடி மகிழ்வதற்காக விளையாட்டு அரங்கங்கள், கிராமப்புற மக்கள் பயன்பெறும் விதமாக மகளிருக்கான இலவச மருத்துவ முகாம், பாரம்பரியத்தை காத்திடும் வகையில் பாரம்பரிய உணவுப் பொருட்களின் உணவுத்திருவிழா, அரசுத் துறைகளின் சிறு கண்காட்சி அரங்குகள் இடம் பெற உள்ளது. புத்தகத் திருவிழாவிற்கு வரும் பொதுமக்களுக்காக கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் இருந்து பஸ் வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அனுமதி இலவசம்
புத்தகத் திருவிழாவில் பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதி இலவசம். ஆகவே புத்தகத் திருவிழாவில் பொதுமக்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு புத்தகங்களை வாங்கி புத்தகம் வாசிக்கும் பழக்கத்தினை குழந்தைகளுக்கு உருவாக்க வழிவகுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் சுந்தரராஜன், கோட்டாட்சியர்கள் பவித்ரா, யோகஜோதி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் செல்வி, கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையர் குமரன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் (மின்னகம்) கோபி, இளநிலை பொறியாளர் சேகர், உதவி பொறியாளர் (கட்டிடங்கள்) கார்த்திகேயன், துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.