நீலமங்கலத்தில் புத்தக கண்காட்சி

நீலமங்கலத்தில் புத்தக கண்காட்சி வருகிற 9-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளதாக கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்

Update: 2022-12-04 18:45 GMT

கள்ளக்குறிச்சி

ஆலோசனை கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட நூலக துறையின் சார்பில் புத்தக கண்காட்சிகள் நடத்துவது தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-

10 நாட்கள் நடக்கிறது

தமிழக முதல்-அமைச்சர் புத்தக வாசிப்பை ஒரு இயக்கமாக கொண்டு செல்வதற்காக மாவட்டங்கள் தோறும் சென்னை புத்தக கண்காட்சியை போன்று தமிழகம் முழுவதும் புத்தககாட்சிகள் நடத்த உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட நூலகத்துறை சார்பில் நீலமங்கலம் கிராமம் அருகே வருகிற 9-ந் தேதி(வெள்ளிக்கிழமை) முதல் 18-ந் தேதி வரை 10 நாட்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

50-க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள்

புத்தக கண்காட்சியில் 50-க்கும் மேற்பட்ட புத்தக பதிப்பக அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. சமுதாயத்தை அறிவார்ந்த நிலைக்கு உயர்த்துவது புத்தக வாசிப்பே ஆகும். இவற்றில் தமிழ் மொழியின் இலக்கிய மரபுகளைக் கொண்டு சேர்ப்பதற்காக இது போன்ற புத்தக கண்காட்சிகள் நடத்தப்படுகிறது.

எனவே அனைத்துத்துறை அலுவலர்களும் பொறுப்புடன் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் சுந்தரராஜன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சுரேஷ், இணை இயக்குநர் (வேளாண்மை) வேல்விழி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மீனா அருள், முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி, கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் பவித்ரா மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்