கோவை ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவை ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர்.

Update: 2022-08-11 17:13 GMT


75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவை ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர்.

சுதந்திர தின விழா

நாட்டின் 75-வது சுதந்திர தின விழா வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கடைவீதிகள், பஸ்நிலையங்கள், வணிக வளாகங்களில் போலீசார் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். நேற்று முன்தினம் இரவு திடீரென்று மாநகர போலீசார் காந்திபுரம் பஸ் நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து நேற்று காலை கோவை ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர். குறிப்பாக ரெயிலில் கொண்டு செல்லப்படும் பார்சல்கள், சரக்குகள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. இதேபோல் ரெயில் நிலைய நுழைவு வாயில் பகுதியில் பயணிகளின் உடைமைகள் பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் ரெயிலில் ஏறுவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் ரெயில்வே போலீசார் அங்குள்ள பிளாட்பார்ம், பயணிகள் தங்குமிடம், ஓய்வறை, கழிப்பறை உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

2,500 போலீசார் பாதுகாப்பு

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவை வ.உ.சி. மைதானத்தில் கலெக்டர் சமீரன் வருகிற 15-ந் தேதி தேசிய கொடி ஏற்றுகிறார். மாவட்டத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க மாநகர் மற்றும் ஊரக பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மேலும் ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், ரிசார்ட்டுகளில் தங்கியுள்ளவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. ரெயில் நிலையம், விமான நிலையம், கடைவீதிகள் உள்பட மக்கள் கூடும் இடங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

கோவை மாநகரில் 1,500 போலீசாரும், ஊரக பகுதியில் ஆயிரம் போலீசார் என மொத்தம் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும் வாகன சோதனைகளும் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது. சந்தேகத்திற்கிடமான வகையில் யாராவது சுற்றித்திரிந்தால் அதுகுறித்து போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்றார்.

விமான நிலையம்

சுதந்தர தின விழாவை முன்னிட்டு கோவை விமான நிலையத்தில் வருகிற 20-ந்தேதி வரை கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதுகுறித்து விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறும்போது, விமான நிலையத்தை சுற்றிலும் அனுமதியின்றி டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகள் முழுமையாக பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே விமானத்தில் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். விமான நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் டிரோன்கள் பறப்பதை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்