பொக்லைன் எந்திர டிரைவர் தற்கொலை
பொக்லைன் எந்திர டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.;
பொன்மலைப்பட்டி:
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பொக்லைன் எந்திர டிரைவர்
திருச்சி மேலகல்கண்டார்கோட்டை திரு.வி.க. தெருவை சேர்ந்த நாகையா-தமிழரசி தம்பதியின் மகன் பழனி (வயது 34). இவர் பொக்லைன் எந்திர டிரைவராக வேலை செய்து வந்தார்.
இவருடைய பெரியப்பா மகன் கார்த்தி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால், கார்த்தியின் மனைவி ஜீவா தனது மாமனார் வீட்டில் வசித்து வந்தார். அப்போது பழனிக்கும், ஜீவாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது.
பெற்றோருக்கு தெரியாமல் திருமணம்
இந்தநிலையில் கணவரை இழந்து தவித்த தனது அண்ணியான ஜீவாவுக்கு வாழ்வு கொடுக்க பழனி நினைத்தார். இதைத்தொடர்ந்து கடந்த மாதம் பெற்றோருக்கு தெரியாமல் ஜீவாவை பழனி திருமணம் செய்து கொண்டு, தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.
இதனால் கோபமடைந்த பழனியின் பெற்றோர், அவரிடம் பேசுவதை நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த ஒரு மாதமாக மனமுடைந்து காணப்பட்ட பழனி, வாழ்க்கையில் விரக்தி அடைந்தார்.
விஷம் குடித்து தற்கொலை
இதையடுத்து சம்பவத்தன்று மேலகல்கண்டார் கோட்டை சுடுகாடு அருகே பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து பழனி மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பழனி நேற்று முன்தினம் காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த பொன்மலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அலாவுதீன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பழனியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து பழனியின் தாய் தமிழரசி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.