காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 கல்லூரி மாணவர்களின் உடல்கள் மீட்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 கல்லூரி மாணவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.

Update: 2023-06-22 18:39 GMT

பென்னாகரம்

கல்லூரி மாணவர்கள்

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள நாகர்கூடல் ஆற்றுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவருடைய மகன் பாலகிருஷ்ணன் (வயது 21). பாலக்கோடு அரசு கல்லூரியில் பி.ஏ. தமிழ் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவருடைய நண்பர் அதியமான்கோட்டை அடுத்த ஆத்துக்கொட்டை பகுதியை சேர்ந்த முல்லைவேந்தன் மகன் தனுஷ் (19). இவர் ஆட்டுக்காரம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் டி.பார்ம் படித்து வந்தார்.

இவர்கள் மற்றும் சாமுவேல் என 3 பேர் நேற்று முன்தினம் ஒகேனக்கல் சென்றனர். அங்கு ஆலம்பாடி புளியந்தோப்பு காவிரி ஆற்றில் குளித்தனர். அப்போது பாலகிருஷ்ணன், தனுஷ் ஆகியோர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். இதுதொடர்பாக சாமுவேல் ஒகேனக்கல் போலீசுக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் 2 பேரையும் தீவிரமாக தேடி வந்தனர்.

உடல்கள் மீட்பு

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பாலகிருஷ்ணன் உடல் மீட்கப்பட்டது. நேற்று காலை தனுஷின் உடல் ஆலம்பாடி காவிரி ஆற்றில் மீட்கப்பட்டது. இருவரின் உடல்களை பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவிரி ஆற்றில் மூழ்கி 2 கல்லூரி மாணவர்கள் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்