வரதராஜபுரம் பகுதியில் பருவமழை பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க தயார் நிலையில் படகுகள்

வரதராஜபுரம் பகுதியில் பருவமழை பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க தயார் நிலையில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Update: 2022-11-12 08:53 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அருகே உள்ள வரதராஜபுரம் பகுதியில் கடந்த 2015- 16 ம் ஆண்டு அதிக அளவில் மழை பெய்து இந்த பகுதி முழுவதும் வெள்ளத்தில் மூழ்கி அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும் அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. இதில் ஆதனூர், வரதராஜபுரம் போன்ற பகுதிகள் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் வரதராஜபுரம் பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். கடந்த காலங்களில் வடகிழக்கு பருவமழை ஏற்பட்டபோது வரதராஜபுரம் பகுதியில் ஹெலிகாப்டர் மூலம் கர்ப்பிணி மற்றும் குழந்தைகளை காப்பாற்றிய வரலாறும் உண்டு. தொடர்ந்து வெள்ளம் ஏற்பட காரணமாக இருந்த பகுதிகளை அதிகாரிகள் பார்வையிட்டு அடையாற்றின் கரையோர பகுதிகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றி கால்வாய்களை சீரமைத்தனர்.

ஆனால் ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவ மழை பெய்ய தொடங்கியதும் வரதராஜபுரம் பகுதியில் உள்ள பாலாஜி நகர், முல்லைநகர், பரத்வாஜ் நகர், மகாலட்சுமி நகர், புவனேஸ்வரி நகர், ராயப்பா நகர், ஸ்ரீராம் நகர், சாந்தி நிகேதன் நகர் உள்ளிட்ட பல்வேறு நகர்களில் மழை நீர் அதிக அளவில் தேங்கி வடியாமல் காணப்படுவது வாடிக்கையாக இருந்து வந்தது.

இதனால் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் வரதராஜபுரம் பகுதியில் உள்ள பொது மக்கள் மிகுந்த அச்சமடைந்து வெளியே செல்லமுடியாத நிலையில் இருந்தது. ஆண்டுதோறும் மழைக்காலங்களில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்வதும் அடையாறு கால்வாயை சீரமைப்பு பணி மேற்கொண்டும் வருகின்றனர். ஆனால் கடந்த 6 ஆண்டுகளாக வடகிழக்கு பருவ மழை தொடங்கியவுடன் வரதராஜபுரம் பகுதியில் உள்ள மக்கள் ஒருவித அச்சத்துடனே உள்ளனர். தற்போது வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் மழை அதிக அளவில் பெய்து வெள்ளம் சூழ்ந்தால் அந்த பகுதியில் உள்ள மக்களை மீட்டு பாதுப்பான இடத்திற்கு கொண்டு செல்ல நீலாங்கரையிலிருந்து 6 படகுகள் கொண்டுவரப்பட்டு வரதராஜபுரம் பகுதியில் நேற்று நிறுத்தி வைக்கப்பட்டது

படகுகளை இயக்க மீனவர்களும் அழைத்து வரப்பட்டனர். வரதராஜபுரம் பகுதியில் படகுகள் இறக்கப்பட்டதை பார்த்த அந்த பகுதி மக்கள் கூறுகையில்:-

மழை வெள்ளம் அதிக அளவில் இருக்குமோ எனவும் ஒவ்வொரு ஆண்டும் மழை காலங்களில் மழை நீரை வெளியேற்ற பல லட்சம் ரூபாய் செலவு செய்து வருகின்றனர். எது எப்படியோ மழை வெள்ளம் சூழந்து பாதிப்பு ஏற்படுத்தாமல் இருந்தால் சரிதான் என்று அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்