பூத்து குலுங்கும் கொன்றை பூக்கள்
கோடியக்கரை வனப்பகுதியில் கொன்றை பூக்கள் அதிக அளவில் பூத்து குலுங்குகின்றன.
வேதாரண்யம்:
கோடியக்கரை வனப்பகுதியில் கொன்றை பூக்கள் அதிக அளவில் பூத்து குலுங்குகின்றன.
கொன்றை பூக்கள்
வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை மூலிகை வனம் மற்றும் வனவிலங்கு சரணாலயம் பகுதிகளில் அதிக அளவில் கொன்றை மரங்கள் உள்ளன. தற்போது இந்த மரங்களில் கொன்றை பூக்கள் பூத்து குலுங்குகின்றன. ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை இந்த கொன்றை மரங்களில் அதிக அளவில் கொன்றை பூக்கள் பூத்துக்குலுங்கும்.
மஞ்சள் வண்ணத்தில் காணப்படும் இந்த பூக்கள் சரம் சரமாக தொங்குவதால் இதனை சரக்கொன்றை எனவும் இப்பகுதி மக்கள் அழைக்கின்றனர். சில மரங்களில் இலைகள் முழுவதும் உதிர்ந்த நிலையில் பூக்கள் மட்டும் மஞ்சள் வண்ணத்தில் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் உள்ளது. இதனால் இந்த கொன்றை பூக்களை இப்பகுதி மக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்து செல்கின்றனர்.
போர்வை போல்...
மேலும் சிலர் புகைப்படங்கள் எடுத்தும், செல்பி எடுத்தும் செல்கின்றனர். கடந்த 2018-ம் ஆண்டு வீசிய காஜா புயலால் இந்த மரங்கள் பெரிதும் சேதம் அடைந்தன. இந்த நிலையில் மீண்டும் அந்த மரங்கள் வளர்ந்து தற்போது அதில் கொன்றை பூக்கள் பூத்து குலுங்குகின்றன. மேலும் சில மரங்கள் காய்க்க தொடங்கி உள்ளது.
இதன் காய்கள் பார்ப்பதற்கு முருங்கைக்காய் போல் நீண்டு இருக்கும். இதன் பூ, இலை, பட்டை, வேர் ஆகியவை மருத்துவ குணம் கொண்டவையாகும். சங்க காலம் தொட்டு பல சிறப்புகளை பெற்ற அந்த மஞ்சள் நிற கொன்றை பூக்கள் கோடியக்கரை வனப்பகுதியில் மஞ்சள் போர்வை விரித்திருப்பதுபோல் காட்சியளிப்பது பார்ப்பவர்களை வியப்படைய செய்கிறது.