தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க ரத்த கையெழுத்து இயக்கம்- ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்
தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க ரத்த கையெழுத்து இயக்கத்தை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.;
கையெழுத்து இயக்கம்
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையை முன்னிட்டு வீர அஞ்சலி செலுத்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் ரத்தத்தில் கையெழுத்து போட்டு உறவுகளை அழைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில் ஆர்.பி. உதயகுமார் தனது ரத்தத்தால் கையெழுத்து போட்டு தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட தொண்டர்களும் ரத்தத்தில் கையெழுத்து போட்டனர். அதன்பின் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், குற்ற பரம்பரைச் சட்டத்தை ஒழிப்பதற்காக 4 ஆயிரம் நாட்கள் அதாவது வாழ்நாளில் ஐந்தில் ஒரு பங்கு சிறை சாலையிலேயே காலம் கழித்தவர். ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் முத்துராமலிங்க தேவர். திருமகனாரின் ஜெயந்தி விழாவானது 28-ந் தேதி ஆன்மிக விழாவாகவும், 29-ந் தேதி அரசியல் விழாவாகவும், 30-ந் தேதி அரசு விழாவாகவும் கொண்டாடப்படுகிறது.
தங்கக்கவசம்
அண்ணா, 3 கல்லூரிகளை தேவர் பெயரில் அமைத்தார். எம்.ஜி.ஆர் முத்துராமலிங்க தேவரின் குருபூஜையை அரசு விழாவாக கொண்டாட உத்தரவிட்டார். அதோடு அரசு அலுவலகத்திலும் சட்டசபையிலும் தேவரின் படம் வைக்க வேண்டும் என்று அரசாணை வெளியிட்டார். ஜெயலலிதா நந்தனத்தில் வெண்கல சிலையை அமைத்தார். மேலும் அவர் 13.5 கிலோ எடை கொண்ட தங்கக்கவசத்தை பசும் பொன்னில் உள்ள தேவருக்கு அணிவித்தார்.
பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி நேரில் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்த மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சொந்தங்களை ரத்த கையெழுத்துட்டு அழைப்பு விடுக்கும் விதமாக இந்த கையெழுத்து இயக்கத்தை தொடங்கி உள்ளோம். நீட் தேர்வு தொடர்பாக தி.மு.க. கையெழுத்து இயக்கம் நடத்துவது போகாத ஊருக்கு வழி சொல்கிறார் உதயநிதி ஸ்டாலின். செங்கல்லை காட்டிய உதயநிதி தற்போது முட்டையை காட்டுகிறார். இந்த முட்டை தி.மு.க.வின் 2 ஆண்டு கால ஆட்சிக்கு மக்கள் கொடுத்த மதிப்பெண். இவ்வாறு அவர் கூறினார்.