'தளபதி விஜய் குருதியகம்' என்ற ரத்ததான செயலி தொடக்கம்...!

விஜய் மக்கள் இயக்கம் சார்பாக 'தளபதி விஜய் குருதியகம்' என்ற ரத்ததான செயலி தொடங்கப்பட்டுள்ளது.

Update: 2022-07-06 10:21 GMT

சென்னை,

நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பாக அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களும், ரத்த தானத்திற்காக 'தளபதி விஜய் குருதியகம்' என்ற பெயரில் செயலியும் இன்று தொடங்கப்பட்டது. இதற்காக சென்னை பனையூரில்நடந்த நிகழ்ச்சியில் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,

"தளபதி விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க, மக்கள் சேவைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள் தளபதியின் உயிருக்கு உயிரான ரசிகர்கள். அப்படிப்பட்ட லட்சக்கணக்கான இளைஞர்கள் சக்தியை, மக்களுக்கு பயனுள்ள வகையில் வழிநடத்தும் விதமாக மற்றும் ஒரு முயற்சியாக இரத்ததானம் செய்ய "தளபதி விஜய் குருதியகம்" என்ற செயலியை (Mobile Application) உருவாக்கி இருக்கின்றேம்.

இதன் மூலம் பல லட்சக்கணக்கான இளைஞர்களை தன்னார்வலர்களாக இணைத்து தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டத்திலும் அனைத்து பகுதிகளிலும் இரத்ததான சேவையை மக்களுக்காக வழங்க உள்ளோம். மேலும் இந்த செயலி, இரத்ததானம் கொடுக்க இணைந்து கொள்ளவும், இரத்தம் தேவைப்படும் முன்வருபவர்கள்இணைந்து கொள்ளவும், பயனாளர்கள் பயன்பெறவும் உறுதுணையாக செயல்படும்.

"தானத்தில் சிறந்த தானம் இரத்த தானம்" விலைமதிப்பற்ற பல உயிர்களை காக்கும் பொறுப்பை தனது ரசிகர்களான தம்பிகளுக்கும், தங்கைகளுக்கும் வழங்கி வழிநடத்த இந்த செயலி துணைநிற்கும் என்பதையும், தளபதியின் சார்பாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறோம்.

இத்தோடு இதே நன்னாளில் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் அதிகாரப்பூர்வமான முகநூல், இன்ஸ்டாகிராம், டுவிட்டர், யூ ட்யூப், இணையதளம் பக்கங்களையும் அறிமுகம் செய்துள்ளோம். தளபதி மற்றும் தளபதி விஜய் மக்கள் இயக்கம் குறித்து தகவல்களை இதன் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்