வேட்டைக்காரன்புதூர் கால்வாயில் அடைப்பு
வேட்டைக்காரன்புதூர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி
வேட்டைக்காரன்புதூர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பாசன கால்வாய்
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை மூலம் பழைய, புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகள் பயன்பெறுகின்றன. இதில் புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு பொள்ளாச்சி, சேத்துமடை, வேட்டைக்காரன்புதூர், ஆழியாறு பீடர் கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்படுகிறது. வேட்டைக்காரன்புதூர் கால்வாய் மூலம் மொத்தம் 11,181 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அ, ஆ என இரு மண்டலங்களாக பிரித்து பாசனம் செய்யப்படுகிறது.
இதில் ஆ மண்டல பாசனத்தில் 5,623 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த மண்டலத்துக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந்தேதி அணையில் இருந்து கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது 3 சுற்றுக்கள் முடிந்து 4-வது சுற்று தண்ணீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 9-ந்தேதி கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து தண்ணீர் நிறுத்தப்பட்டு, கால்வாய் சீரமைக்கப்பட்டது. அதன்பிறகு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை
இதற்கிடையில் தேவிபட்டிணத்தில் சாலையை அகலப்படுத்துவதற்கு வேட்டைக்காரன்புதூர் கால்வாய் பகுதியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கடைமடை வரை தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதுகுறித்து விவசாயிகள் வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் நேற்று முன்தினம் நள்ளிரவில் வேட்டைக்காரன்புதூர் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த நிலையில் நேற்று காலை சப்-கலெக்டர் பிரிங்கா விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மீண்டும் அரசாணை
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
பாசன காலமான 135 நாட்கள் காலக்கெடுவுக்குள் 75 நாட்கள் தண்ணீர் வழங்க வேண்டும் என்று அரசாணை பெறப்பட்டு உள்ளது. கால்வாய் உடைப்புக்கு பிறகு தற்போதுதான் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெறாமல் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வேட்டைக்காரன்புதூர் கால்வாய் பகுதியில் சாலை பணிகளை மேற்கொள்கின்றனர். இதனால் கால்வாயில் குறைந்த அளவே தண்ணீர் செல்வதால் கடைமடைக்கு வரவில்லை. எனவே சாலை பணிகள் முடிந்த பிறகு மீதமுள்ள நாட்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டும். இதுகுறித்து பேச்சுவார்த்தையின்போது மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து மீதமுள்ள நாட்களுக்கு வழங்க மீண்டும் ஒரு அரசாணை பெற்றுக்கொடுப்பதாக சப்-கலெக்டர் கூறி உள்ளார். இதை ஏற்று போராட்டம் கைவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.