புளியரை சோதனைச்சாவடியில் முற்றுகை போராட்டம்-ஆலங்குளத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பிரேமலதா பேச்சு
கேரளாவுக்கு கனிமவள கடத்தலை தடுக்கவில்லையெனில், புளியரை சோதனைச்சாவடியில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று ஆலங்குளத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பிரேமலதா பேசினார்.
ஆலங்குளம்:
கேரளாவுக்கு கனிமவள கடத்தலை தடுக்கவில்லையெனில், புளியரை சோதனைச்சாவடியில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று ஆலங்குளத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பிரேமலதா பேசினார்.
ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கனிமவளங்கள் கொண்டு செல்வதைக் கண்டித்து, தே.மு.தி.க. சார்பில் ஆலங்குளம் காமராஜர் சிலை அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில பொருளாளர் பிரேமலதா தலைமை தாங்கினார்.
மாநில துணை பொதுச்செயலாளர் பார்த்தசாரதி, இளைஞர் அணி துணை செயலாளர் ராஜேந்திரநாத், ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் பழனிசங்கர் வரவேற்று பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் பிரேமலதா பேசியதாவது:-
கனிமவள கடத்தல்
போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறி, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரி உள்ளிட்ட 3 அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்கு பயிலும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இதற்கு உடனடியாக சுகாதாரத்துறை அமைச்சர் தீர்வுகாண வேண்டும். அமலாக்கத்துறை அதிகாரிகளை தாக்கிய தி.மு.க.வினரை கைது செய்ய வேண்டும்.
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கனிமவளங்கள் கொண்டு செல்ல அனுமதித்தது யார்?, இங்கிருந்து கனிமவளங்களை கேரளாவுக்கு கொண்டு சென்று விட்டு, அங்கிருந்து மருத்துவ கழிவுகள், இறைச்சி கழிவுகளை தமிழகத்துக்கு கொண்டு வருகின்றனர். கனிமவள கடத்தலை தடுக்கவில்லையெனில், தமிழக- கேரள எல்லையான புளியரை சோதனைச்சாவடியில் தே.மு.தி.க. சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும். ஒரு லாரியில் கூட கனிமவளங்களை கேரளாவுக்கு கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டோம்.
புதிய நாடாளுமன்றம் திறப்பு
தமிழகத்தை போதை மாநிலமாக தி.மு.க. அரசு மாற்றி வருகிறது. கஞ்சா, மது, கள்ளச்சாராயத்துக்கு இளைஞர்கள் அடிமையாகி வருகின்றனர். அரசு டவுன் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணத்துக்கு அனுமதி அளித்து விட்டு, ஓசியில் பயணிக்கிறார்கள் என்று பெண்களை அமைச்சரே இழிவுபடுத்துகிறார். மக்களின் வரிப்பணத்தில் இயக்கப்படும் பஸ்களில்தான் பெண்கள் பயணிக்கின்றனர்.
புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்புக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். அங்கு தமிழகத்தின் செங்கோல் நிறுவப்பட்டு இருப்பது அனைவருக்கும் பெருமை அளிக்கிறது. எனினும் திறப்பு விழாவுக்கு ஜனாதிபதியை அழைக்காதது தவறுதான். இதற்கான விளக்கத்தை பா.ஜ.க.வினர்தான் கூற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் தே.மு.தி.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.