வண்ணாரப்பேட்டையில் பா.ஜ.க. செயற்குழு கூட்டத்தில் ரகளை; வாலிபர் கைது
வண்ணாரப்பேட்டையில் பா.ஜ.க. செயற்குழு கூட்டத்தில் ரகளையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;
சென்னை வண்ணாரப்பேட்டை காலிங்கராயன் தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பா.ஜ.க. செயற்குழு கூட்டம், மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பா.ஜ.க. தமிழக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கலந்து கொண்டார். இதில் செயற்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்போது ஆர்.கே.நகர் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (வயது 32) என்பவர் திடீரென கூட்டத்துக்குள் நுழைந்து மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி ரகளையில் ஈடுபட்டார். உடனே கிருஷ்ணகுமாரின் ஆதரவாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ரகளையில் ஈடுபட்ட விஜயகுமாரை அங்கிருந்து வெளியேற்றினர்.
இது குறித்து பா.ஜ.க. பிரமுகரான ராயபுரத்தைச் சேர்ந்த பழனி வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்தனர்.