பாஜக எந்த பொதுத்துறை நிறுவனத்தையும் விற்கவில்லை - அண்ணாமலை

காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலத்தில்தான் பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டமடைந்து வீழ்ச்சியை கண்டது என்று கூறியுள்ளார்.

Update: 2022-08-13 15:31 GMT

காரைக்குடி,

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை காரைக்குடியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது ,

பாஜக எந்த பொதுத்துறை நிறுவனத்தையும் விற்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலத்தில்தான் பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டமடைந்து வீழ்ச்சியை கண்டது . ப.சிதம்பரம் பாஜகவை குறை கூற கூடாது. பாஜக 135 கோடி மக்களுக்கும் சேவை செய்து வருகிறது. ஒரே நாடு ஒரே தேர்வு என்பதை எதிர்க்கும் ப.சிதம்பரம் ஐ.ஏ.எஸ் , ஐ.பி.எஸ் உள்ளிட்ட தேர்வுகளை மட்டும் எப்படி ஏற்றுக்கண்டார்.

காவல்துறையினருக்கு ஷிப்ட் முறையில் 8 மணி நேரம் பணி வழங்க வேண்டும். காஷ்மீரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணனுக்கு அஞ்சலி செலுத்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மதுரை பகுதிக்கு வந்திருந்தார். ஆட்சியாளர்கள் அஞ்சலி செலுத்திய பிறகு பாஜகவினர் உட்பட மற்றவர்கள் அஞ்சலி செலுத்தலாம் என காத்திருந்தனர்.

அப்போது அமைச்சர் பாஜகவினருக்கு அஞ்சலி செலுத்த தகுதியில்லை அவர்கள் இங்கிருந்து வெளியேற்றப்படவேண்டும் என்று கூறியுள்ளார். இதனை எப்படி பாஜக தொண்டனால் ஏற்றுக்கொள்ள முடியும் . நான் வன்முறையை கையில் எடுக்கக்கூடிய கட்சியை வழி நடத்தவில்லை.

அதே வேளையில் அமைச்சரும் பாஜகவினருக்கு அஞ்சலி செலுத்த தகுதியில்லை என்று கூறியிருந்தால் அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்துவேன். பாரதிய ஜனதா தொண்டர்களை அமைச்சர் ஏன் சீண்டி பார்க்க வேண்டும். எதற்காக அஞ்சலி செலுத்த தகுதியற்றவர் என்று சொல்ல வேண்டும். இதற்கு முதலமைச்சர் அமைச்சரிடம் விளக்கம் கேட்க வேண்டும்.

இவ்வாறு கூறினார் .

Tags:    

மேலும் செய்திகள்