புதுச்சேரி மின்துறையைத் தனியார் மயமாக்கும் முடிவினை பாஜக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் - சீமான்

புதுச்சேரி மின்துறையைத் தனியார் மயமாக்கும் முடிவினை பாஜக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.

Update: 2022-06-20 13:13 GMT

சென்னை,

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி உள்ளிட்ட ஒன்றிய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள யூனியன் பிரதேசங்களின் மின்துறையைத் தனியார் மயமாக்கும் ஒன்றிய அரசின் முடிவு கடும் அதிர்ச்சியளிக்கிறது. கோடிக்கணக்கான மக்களின் வரிப்பணத்தில் சேவை நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் பெருமுதலாளிகளின் இலாப நோக்கத்திற்காகத் தாரைவார்க்கும் ஒன்றிய அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 2020ஆம் ஆண்டு 'ஆத்ம நிர்பான் அபியான்' திட்டத்தின்கீழ் யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறையைத் தனியார் வசம் ஒப்படைப்பதற்கான திட்டத்தை அறிவித்தபோதே, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், மின்துறை ஊழியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் மிகக் கடுமையாக எதிர்த்தனர். மின்துறை தனியார் மயமாக்கப்படுவதால் தங்களுக்குப் பணிப்பாதுகாப்பு இல்லையென்பதால் புதுச்சேரி மின்துறை ஊழியர்களும் பல்வேறு தொடர்ப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

பொதுத்துறை பட்டியலில் உள்ள மின்துறையை, மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாகத் தனியாருக்கு விற்கும் ஒன்றிய அரசின் வல்லாதிக்க முடிவினை எதிர்த்து புதுச்சேரி மாநில அரசு 22.07.2020 அன்று சட்டமன்றத்தில் ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசிற்கு அனுப்பியது. ஆயினும், அரசியலமைப்பின் மிகமுக்கிய அங்கமாக விளங்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில சட்டப்பேரவையின் தீர்மானத்தைச் சிறிதும் மதியாது 03.12.2021 அன்று மின்துறையைத் தனியார் மயப்படுத்தும் முடிவை ஒன்றியத்தை ஆளும் மோடி அரசு அறிவித்துள்ளது மாநில தன்னாட்சி உரிமையை நசுக்கும் கொடுங்கோன்மையாகும்.

ஒன்றிய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் தொடர்வண்டி, விமானம், நெடுஞ்சாலை, ஆயுள் காப்பீடு, வங்கிகள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களையும், கடல், காடு, கனிம சுரங்கங்கள் உள்ளிட்ட நாட்டின் இயற்கை வளங்களையும் பன்னாட்டுப் பெருமுதலாளிகளுக்குத் தாரைவார்த்த ஒன்றிய பாஜக அரசு, தற்போது பொதுப்பட்டியலில் உள்ள மின்துறையையும் யூனியன் பிரதேச அரசுகளின் அனுமதியின்றித் தனியாருக்குத் தாரைவார்க்க முயல்வது, மாநில அரசுகளின் இறையாண்மையை பறிக்கும் எதேச்சதிகார போக்கின் உச்சமாகும்.

எதிர்காலத்தில் பொதுப்பட்டியலில் உள்ள அனைத்து மாநிலங்களின் மின்துறை மட்டுமின்றிக் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட மக்களுக்கான அனைத்து சேவைத்துறைகளையும் தனியாருக்குத் தாரைவார்ப்பதற்கான முன்னோட்டமேயாகும். இதன் மூலம் மாநில அரசுகளை அதிகாரம் ஏதுமற்ற ஒன்றிய அரசின் ஏவல் அமைப்புகளாக மாற்ற ஒன்றிய பாஜக அரசு முனைகிறது என்பது மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய – மாநில அரசுகள் என்பது மக்களின் வளமைமிக்க, பாதுகாப்பான நல்வாழ்விற்காக இயங்கும் அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட ஜனநாயக அமைப்பு என்ற அடிப்படை அறத்திலிருந்து தடம்புரண்டு, ஒரு சில தனியார் பெருமுதலாளிகளின் நலனுக்காகச் செயல்படும் தரகு நிறுவனமாக மாற்றிநிறுத்தி, மக்களாட்சி தத்துவத்தின் மாண்பையே மோடி அரசு முற்று முழுதாக சீர்குலைத்துள்ளது.

ஏற்கனவே, மின்துறை தனியார் மயப்படுத்தப்பட்ட ஒடிசா, டெல்லி போன்ற மாநிலங்களில் தனியார் நிறுவனங்கள் கொள்ளை இலாபம் பார்க்கும் விதமாக மின்கட்டணமானது மின்அலகு ஒன்றுக்கு 8 ரூபாய் அளவிற்கு பன்மடங்கு அதிகமாக வசூலிக்கப்படுவதால், மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். மேலும், குறைவாக மின்சாரத்தைப் பயன்படுத்தும் ஏழை, எளிய மக்களுக்கும், விவசாயிகளுக்கும் வழங்கப்படும் மின்மானியமும் நிறுத்தப்படும் பேராபத்தும் ஏற்படும். கட்டுப்படுத்தப்படாத மின்கட்டண விலையேற்றத்தால் சிறு, குறு தொழில் நிறுவனங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு பொருளாதார வீழ்ச்சியும் ஏற்படக்கூடும்.

ஆகவே, பாண்டிச்சேரி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களின் மின்துறையைத் தனியார் மயமாக்கும் தான்தோன்றித்தனமான முடிவை ஒன்றிய பாஜக அரசு உடனடியாக கைவிட வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். மேலும், ஒன்றிய அரசின் எதேச்சதிகார முடிவினை எதிர்த்து, புதுச்சேரி மின்வாரிய ஊழியர்கள் முன்னெடுக்கின்ற அனைத்துவிதமான அறவழி போராட்டத்திற்கும் நாம் தமிழர் கட்சி தனது முழு ஆதரவினை அளிப்பதோடு, கோரிக்கைகள் வெல்லும்வரை தோள்கொடுத்து துணைநிற்கும் என்றும் உறுதியளிக்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்